
லக்னோ,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் திக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களம் கண்ட லக்னோ அணி இந்த தோல்வியின் மூலம் லீக் சுற்றுடன் வெளியேறியது.
இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் 7 ரன்களில், ஆட்டமிழந்து. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பண்ட் (ரூ.27 கோடி) நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்புகிறார். இந்த சீசனில் அவர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பது இது 6-வது முறையாகும். நடப்பு சீசனில் வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
இந்த ஆட்டத்தை மைதான பால்கனியில் இருந்து பார்த்து கொண்டிருந்த லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, பண்ட் ஆட்டமிழந்ததும் அதிருப்தியடைந்து அங்கிருந்து சென்றார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.