
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சூரிய குல சத்திரியர் வம்சமாக போற்றப்படுபவர்; சங்க காலத்தில் உதித்த சரித்திர நாயகர்; முத்தரையர் இனத்தின் குலதெய்வக் கடவுள்களில் ஒருவராக போற்றப்படுபவர்; முதுதமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரியவர், பெரும்பாட்டன் பேரரசர் சுவரன்மாறன் முத்தரையர்(எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார்.
தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து அவை, காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பேரரசர் பெரும்பிடு முத்தரையர் ஆற்றிய பணிகளை வரலாறு பதிவு செய்கிறது. கன்னித் தமிழை வளர்த்தவர்களில் முதன்மையாக இடம்பெறுபவர் பெரும்பிடுகு முத்தரையரே ஆவார்.
அரசர்கள் போருக்குச் செல்லும் முன்பு வஞ்சிப் பூவையும், போரில் வெற்றி பெற்ற பின்னர் வாகைப் பூவையும் சூடுவது வழக்கம். ஆனால், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் போருக்கு செல்லும்போதே வாகைப் பூவை சூடிக்கொண்டு வெற்றி என்றும் நமதே என்று சொல்வாராம். அந்த வகையில், தன் வாழ்நாளில் 16 பெரும் போர்களில் தோல்வியே காணாத மாபெரும் அதிதீரன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மட்டுமே. அத்தகைய கவர்மிகு மாவீரராகத் திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா, 1996-ம் ஆண்டு தமது முதலாவது ஆட்சிக் காலத்தில், திருச்சி மாநகரின் மையப் பகுதியில் உருவச் சிலையை நிறுவினார்கள். மேலும் அவரது பிறந்த நாளை 2002-ம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடவும் ஆணையிட்டார்கள். அதேபோல் அம்மா நல்லாசியோடு செயல்பட்ட எனது தலைமையிலான கழக ஆட்சியில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இப்பொழுது பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பதையும் இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
போற்றுதலுக்குரிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 23.5.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி; திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான குமார்; திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் ஆகியோர் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.