
மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இதுவரை 61 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதன் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன். மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே போட்டி நிலவுகிறது.
இதில் 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்துவிடும்.
ஒருவேளை மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் அந்த அணியில் இடம் பெற்றுள்ள வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து), ரையன் ரிக்கல்டன் மற்றும் கார்பின் போஷ் (இருவரும் தென் ஆப்பிரிக்கா) அகியோர் விளையாட மாட்டார்கள். தங்களது தேசிய அணிக்காக விளையாட உள்ளதால் அவர்கள் பிளே ஆப் சுற்றை தவற விடுகின்றனர்.
எனவே அவர்களுக்கு மாற்று வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் கிளீசன் மற்றும் சரித் அசலன்கா ஆகியோரை மாற்று வீரர்களாக மும்பை நிர்வாகம் அணியில் சேர்த்துள்ளது.