மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். இவர் ஐ.பி.எல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தொடர்ந்து மற்ற லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு, ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டதோடு, எந்த அணிக்கும், கேப்டனாக விளையாட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் டேவிட் வார்னர் கேப்டனாக விளையாட விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் 20 ஓவர் லீக் போட்டிக்கான சிட்னி தண்டர்ஸ் அணியின் கேப்டனாக முன்னாள் வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். 6 ஆண்டுக்கு பிறகு அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கேப்டன் பதவிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.