
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த அத்துமீறலில் வழிபாட்டுத்தலங்களையும் குறி வைத்து தாக்கியது. லடாக்கின் லே முதல் குஜராத்தின் சர் கிரீக் வரை 36 இடங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து சுமார் 400 டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் படைகள் தாக்க முயற்சித்ததாகவும், அவற்றை இந்திய படைகள் வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் காஷ்மீரின் பூஞ்சில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலில் ஏராளமான பள்ளிகள் சேதமடைந்துள்ளது. இதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததனர். இந்த தகவல்களை மத்திய அரசு கூறியது. தொடர்ந்து அத்துமீறி பாகிஸ்தான் தாக்கி வரும் நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்ட வளர்ச்சி அதிகாரி ராஜ்குமார் தாப்பா உயிரிழந்தார். இதனை ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா பதிவு செய்துள்ளார். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அந்த அதிகாரி பங்கேற்றதாகவும் உமர் அப்துல்லா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.