![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38328119-testcaptain.webp)
மும்பை,
ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது.
இந்த தோல்விகளுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். பேட்ஸ்மேனாக மட்டுமன்றி கேப்டன்ஷிப்பிலும் சொதப்பியது காரணமாக அமைந்தது. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனவே அவருக்கு பதிலாக புதிய வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற நிலைக்கு பி.சி.சி.ஐ. சென்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மீண்டும் விராட் கோலியை டெஸ்ட் அணியின் கேப்டனாக பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது குறித்து வெளியான தகவலின் படி, விராட் கோலி ஆக்ரோஷமான கேப்டன்சியின் கீழ் இந்தியா பல டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளதால் மீண்டும் அவரது தலைமையின் கீழ் டெஸ்ட் அணியை கொண்டுவர கம்பீர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது இருக்கும் இளம் வீரர்களுக்கு இன்னும் அனுபவம் தேவை என்பதால் அதுவரை விராட் கோலியிடம் கேப்டன்சியை ஒப்படைக்குமாறு பி.சி.சி.ஐ.-யிடம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.