மீ டைம்!

3 months ago 20

நாம் அனைவருமே வேலைக்காக குறிப்பிட்ட நேரம், குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக குறிப்பிட்ட நேரம் என ஒரு நாளில் பலவற்றுக்கும் பெருமளவு நேரத்தினை ஒதுக்குகிறோம். ஆனால் நம்மை நாமே ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நம்மை நாமே ரிலாக்ஸ் செய்துகொள்ள நேரம் ஒதுக்குகிறோமா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும். ஆனால் நமக்கே நமக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியம். அதை தான் மீ டைம் என்கிறோம்..ஆனால் நம்மில் எவ்வளவு பேர் மீ டைம் குறித்து அறிந்திருக்கிறார்கள் என்று பார்த்தால்… பலருமே இல்லை என்று தான் தலையாட்டுவார்கள். குறிப்பாக பெண்கள் தினமும் அரைமணி நேரமாவது தங்களுக்கான மீ டைம் எடுத்துக் கொள்வது நல்லது. அது நமது ஆரோக்கியத்தை காப்பதோடு அலைபாயும் மனதையும் கட்டுக்குள் வைக்க உதவும். கடுமையான வேலைப் பளு மற்றும் மன அழுத்தங்களிலிருந்து நம்மை விடுவிக்கும். நமக்கு தலை போகிற எந்த மாதிரியான வேலைகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களுக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம். அந்த நேரத்தில் பிடித்த பாடலை கேட்பது, விரும்பிய புத்தகத்தை வாசிப்பது, நெடுநாள் காண விரும்பிய திரைப்படங்களை பார்ப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, வெளியே சென்று வருவது, இசை கேட்பது, குழந்தைகளோடு விளையாடுவது, பிடித்ததை எழுதுவது, பிடித்த நபரிடம் போனில் பேசுவது, கவிதை எழுதுவது என எதுவாகவும் இருக்கலாம்.

வேலை, குடும்பம் என பரபரப்பான இயந்திர வாழ்க்கைக்குள், எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருக்கும் பலருக்கும் தனக்காக நேரம் ஒதுக்குவது என்பதெல்லாம் கடினமான ஒன்றாகவே தான் இருக்கும். வீட்டில் உள்ள வேலைகளை அனைவருக்கும் பகிர்ந்தளியுங்கள். நீங்கள் செய்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்கிற மாய பிம்பத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள். வேலைகளை பகிர்ந்து அளிக்கும் போது நிறைய நேரம் மிச்சமாகும். அதே போன்று வேலைகளை சரியான நேரத்தில் திட்டமிட்டு செய்தாலும் உங்களுக்கான பெருமளவு நேரம் நிச்சயம் கிடைக்கும். அதிலும் இதோ பண்டிகை காலம் வந்துவிட்டது. இழுத்துப் போட்டுக் கொண்டு அத்தனை வேலைகளையும் நீங்களே செய்யாமல். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவருக்கு என்ன வேலைகள் முடியுமோ அதை பகிர்ந்து கொடுங்கள். பகிர்ந்து வீட்டு வேலைகள் செய்கையில் குழந்தைகளுக்கும் குடும்பத்தாருடனான நெருக்கம் அதிகரிக்கும். ஃபேமிலி டைம் அதிகரிக்க வீட்டில் சந்தோஷம் நிலவும். மேலும் அம்மா வீட்டில்தானே இருக்கிறார் என்னும் எண்ணம் மாறும். விடுமுறை காலங்கள் என்பது வீட்டின் ஆண்கள், மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். குறிப்பாக விடுமுறை என்றாலே பெண்களுக்கான வீட்டு வேலைகள் டபுள், டிரிபிளாக மாறிவிடும். எதையுமே நாம் செய்தால்தான் சரியாக இருக்கும் என்கிற நிலையை மாற்றுங்கள். நாம் இல்லை என்றாலும் இந்த உலகம் சுற்றும். எனவே இருக்கும் வரை மற்றவர்களுக்கு பயனுள்ளவராக வாழ வேண்டும். அதே சமயம் நமக்கான வாழ்க்கையையும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அன்றாட பரபரப்புகளுக்கு இடையே குறிப்பிட்ட ஒரு நேரத்தை ஒதுக்குவதை கட்டாய மாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பவராக இருந்தால் உங்களுக்கான அந்த நேரத்தில் அமைதியாக அமர்ந்திருப்பதே கூட போதுமானதாக இருக்கும்.

உங்களுக்கு கிடைத்த அரைமணி நேரத்தில் அமைதியாக பத்து நிமிடம் தியானம் செய்யலாம். இருபது நிமிடங்கள் யோகா செய்யலாம். உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும். பத்து நிமிடம் காலாற தோட்டத்தில் நடக்கலாம். பிடித்த பாடல் கேட்டுக்கொண்டு பார்க் அல்லது மொட்டை மாடியில் வாக்கிங் போகலாம். மொட்டை மாடியில் வெறும் தரையில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை கூட எண்ணலாம். கண்களை மூடி அமர்ந்து ஆழ்ந்த சுவாசங்களை கவனிக்கலாம். மூச்சு பயிற்சி செய்யலாம். எதுவுமே செய்ய தோன்றாமல் சும்மாவே கூட அமர்ந்திருக்கலாம் அல்லது கட்டாந்தரையில் படுத்து உருளலாம். ஆக மொத்தம் நமக்கான தனிமையான தருணமாக அது இருக்க வேண்டும்.
குறிப்பாக இவையனைத்திற்கும் நடுவே உங்கள் மீ டைமில் மறந்தும் மொபைலை தொடாதீர்கள். மொபைல் போனை முடிந்தால் சைலன்ட் மோடில் போட்டோ அல்லது ஆப் செய்து வைத்தோ நிம்மதியாக இருங்கள். முடிந்தால் அருகில்இருக்கும் உங்கள் தோழிகள், நண்பர்களை சந்தித்து பல நினைவுகளை பேசி மகிழுங்கள். நல்ல நினைவுகளுக்கு நம் மனதை புத்துணர்வாக்கும் வலிமை உண்டு. தினமும் முடியவில்லை என்றாலும் உங்களுக்கு மிகவும் பிடித்தமானவற்றை செய்வதற்கு என்று வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் இரண்டு மூன்று நாட்களோ உங்களுக்கென ஒதுக்கி பிடித்த விஷயங்களை செய்யுங்கள் அது உங்கள் அடுத்து வரும் நாட்களில் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். எப்படியாவது நமக்காக தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குவதன் மூலம் மனதையும், உடலையும் புத்துணர்வோடு வைத்துக் கொள்ள முடியும்.

தனிப் பயணங்கள் கூட சிறந்தது தான். இயற்கையோடு இயற்கையாக நாடோடியை போல சுற்றி வரலாம். இதெல்லாம் குறிப்பாக 30 வயதிற்கு மேல் நிச்சயம் தேவையான ஒன்று. வீட்டுக்குள்ளேயே கிடந்து கிச்சனிலேயே உழன்று கொண்டிருந்தால் வீட்டில் உள்ளோர் மீதும் கூட ஒருவித வெறுப்பு உண்டாகும். இது குடும்ப வாழ்க்கைக்கும் ஆபத்து. இதனால்தான் பல வீடுகளில் பெண்களின் 30களில் விவாகரத்து, தேவையில்லாத குடும்பச் சண்டைகள் என வீட்டின் நிம்மதி பறி போகும். இதற்கு குடும்பத்தாரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். நீ வீட்டில் சும்மாதானே இருக்கிறாய் உனக்கெதற்கு ஓய்வு, உனக்கெதற்கு விடுமுறை எனக் கேட்காமல் ஒரு நாள் அவர்களின் வேலைகளை பகிர்ந்துபாருங்கள் புரியும். காரணம் வேலைக்கே சென்றால் கூட மார்கெட்டிங், சேல்ஸ், மீடியா வேலைகள் தவிர பெரும்பாலான வேலைகள் அலுவலகத்தில் அமர்ந்து எட்டு மணிநேரங்கள் கணினி முன் உட்கார்ந்துதான் வேலை செய்கிறோம். ஆனால் வீட்டு வேலைகள் அப்படி அல்ல. மூன்று வேலை உணவு, அதற்கான பாத்திரங்கள் சுத்தம் செய்தல், மீண்டும் உணவு தயாரித்தல், துணிகள் துவைத்தல் என்பது உடலுக்கும் , மனதுக்கும் ஒருவித ஓய்வில்லா சுழற்சி வேலைகள் இவை. இதில் அவ்வப்போது பெண்களுக்கு ஓய்வுக் கொடுப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கும் நல்லது. உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு மனதை ஆரோக்கியமாக வைத்து கொள்வதும் முக்கியம் தானே. பல வேலைகளுக்கு மத்தியில் உங்களது மனநல நலனுக்கு முன்னுரிமை அளிப்பது ரொம்பவுமே அவசியம் தானே!!
– தனுஜா ஜெயராமன்

 

The post மீ டைம்! appeared first on Dinakaran.

Read Entire Article