தமிழ்நாடு, உபி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் புதிய பாஜ தலைவர்கள்: அடுத்த ஓரிரு நாட்களில் அறிவிப்பு

2 days ago 5

புதுடெல்லி: தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் அடுத்த ஓரிரு நாட்களில் புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்து அறிவிக்க பாஜ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்ய கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்காக கட்சியின் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடு தழுவிய புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. கட்சியின் விதிப்படி, புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க, குறைந்தபட்சம் பாதி அளவிலான மாநிலங்களில் புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

பாஜ கட்சியில் மொத்தம் 37 மாநில தலைவர்கள் பதவி உள்ளன. இதில் 19 மாநிலங்களில் புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதமே புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உபி, கர்நாடகா, மபி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் புதிய தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் இதுவரையிலும் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளார். கட்சி மேலிடத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், ஆர்எஸ்எஸ்சின் நம்பிக்கையை பெறுவதிலும் உள்ள செயல்முறை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

உபி, மபியில் முறையே பூபேந்திர சிங், வி.டி.சர்மா ஆகியோருக்கு பதிலாக புதிய தலைவர்கள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போதைய தலைவர் விஜயேந்திராவை தொடர முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர, குஜராத், ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய பல மாநிலங்களிலும் பாஜ இன்னும் புதிய தலைவர்களை தேர்வு செய்யவில்லை. இந்த நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு தினங்களில் முடிக்கப்படும் என்றும் அதைத் தொடர்ந்து அந்தந்த மாநில பாஜ தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post தமிழ்நாடு, உபி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் புதிய பாஜ தலைவர்கள்: அடுத்த ஓரிரு நாட்களில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article