நன்றி குங்குமம் டாக்டர்
இணையதள செயலிகளான டப்ஸ்மெஷர், டிக்டாக் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி. இவரது வீடியோக்கள் மூலம், 2019-ம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவருக்கு ஒரு சிறு கதாபாத்திரமே கொடுக்கப்பட்டது. அதில் அவரது நடிப்பிற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்க, அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர், சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும், விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து, எனிமி, ஜாங்கோ, எம்.ஜி.ஆர். மகன், ரோமியோ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இது தவிர, தெலுங்கு, கன்னட படங்களிலும் வாய்ப்புகிட்ட அந்த மொழிகளிலும் நடித்து வருகிறார்.
ஒர்க்கவுட்ஸ்: சினிமாவுக்குள் வந்த பிறகுதான் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன். அது முதல் தினசரி குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமாவது உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்கிவிடுவேன். வாரத்தின் ஆறு நாட்கள் உடற்பயிற்சிகளை செய்வேன். ஒருநாள் ரெஸ்ட். அந்தவகையில் எனது தினசரி பயிற்சிகள் என்றால் முதலில் யோகாவுடன் எனது வொர்க்கவுட்ஸ் தொடங்கும்.
பின்னர், ஸ்கிப்பிங் அரைமணி நேரம் செய்வேன். அதன்பின்னர், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அரைமணி நேரம். பின்னர், ஸ்டேமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள் செய்வேன். பின்னர், புஷ்- அப், புல் – அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளும் செய்வேன். இவையெல்லாம் எனது தினசரி உடற் பயிற்சிகளாகும். அதுபோல் எனக்கு இன்டோர் விளையாட்டுகளும் மிகவும் பிடிக்கும். வீட்டிலிருக்கும் ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் அமர்ந்து செஸ், கேரம் என விளையாடுவோம்.
டயட்: நான் பெரிய டயட் எல்லாம் கடைபிடிப்பது இல்லை. ஐஸ்க்ரீம், சாக்லேட், கேக் என எல்லாவற்றையும் விரும்பி சாப்பிடுவேன். ஆனால், எதுவாக இருந்தாலும் அளவோடுதான் சாப்பிடுவேன். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நல்ல புசுபுசுவென இருப்பேன். சினிமாவுக்குள் வந்தபிறகு ஃபிட்னெஸ் மீது கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதுவும் கொரானா லாக்டவுனிலிருந்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினேன். அசைவத்தில் இருக்கும் கொழுப்புகள் தவிர்க்கப்பட்டதாலோ என்னவோ, எனது அதிகப்படியான உடல் எடை குறைந்து ஃபிட்டாக இருப்பதாக தோன்றியது. அதிலிருந்து அதை அப்படி தொடர ஆரம்பித்துவிட்டேன். என் உடல் எடை சீராக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.
பியூட்டி: பியூட்டி என்று எடுத்துக் கொண்டால், பொதுவாக நான் லைட் மேக்கப்பைதான் அதிகம் விரும்புவேன். பெரிய அளவில் மேக்கப் செய்வதெல்லாம் அவ்வளவாக பிடிக்காது. என் கைப்பையில், லிப்ஸ்டிக் கூட வைத்திருக்க மாட்டேன். அதற்கு மாற்றாக லிப் கிளாஸ் பயன்படுத்துவேன். அதுபோல சென்டட் பாடி லோஷன் அதிகம் பயன்படுத்துவேன். அதைப் போட்டாலே பெர்ப்யூம் போட்ட பீல் கிடைத்துவிடும்.
அதுபோல பொதுவாக சிம்பிள் பியூட்டி டிப் என்றால், சன்ஸ்கீரின் பயன்படுத்துவதை கட்டாயமாக வைத்து இருக்கிறேன். இதனை எல்லாருமே பயன்படுத்தலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் இருப்பவர்கள் என்று இது சருமத்தை பாதுகாக்கும். இது தவிர, சரும பாதுகாப்புக்கு என் டெர்மடாலிஜிஸ்ட் என்ன சொல்றாங்களோ அதைத்தான் ஃப்லோ பண்றேன்.
மற்றபடி நடிகையாக இருப்பதால், முகத்தில் நானாக கடலை மாவு கூட போட மாட்டேன். ஏனென்றால் எனக்கு அடிக்கடி முகப்பரு வந்துவிடும். இதனால், முகம் கெட்டுப் போய்விடுமே என்ற பயத்தினால் முகத்தில் நானாக எதுவும் செய்ய மாட்டேன். உடலுக்கு தக்காளி சாறு, முல்தானிமெட்டி போன்றவற்றை பயன்படுத்துவேன். அதுபோன்று தலைமுடி பராமரிப்பு என்றால், நான் சிறுவயது முதலே பின்பற்றிய பராமரிப்புதான் இன்று வரை தெரடர்கிறது.
வாரத்தில் ஒருநாள் கட்டாயமாக தலையில் எண்ணெய் வைத்து தலை குளிப்பேன் அவ்வளவுதான். சிறுவயதில் அவ்வளவாக பார்லர் சென்று முடிவெட்டும் பழக்கம் கூட எனக்கு கிடையாது. அதெல்லாம்தான் எனது தலை முடி பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், பொதுவாக பெண்கள் யாரையும் சார்ந்து இல்லாமல் தன்னம்பிக்கையாக இருந்தாலே மிகவும் அழகாக தெரிவார்கள். அதற்கு பெண்களுக்கு கல்வி முக்கியம். அது உங்களை இன்டிபெண்டன்ட்டாக வைத்திருப்பதோடு அழகாகவும் காண்பிக்கும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post மிருணாளினி ரவி ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! appeared first on Dinakaran.