மீனம்பாக்கம்: கொழும்பிலிருந்து நேற்றிரவு சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சுமார் 35 வயது வடமாநில பயணிக்கு குரங்கம்மை தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தின்பேரில் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து நேற்றிரவு சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்துக்கு லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்திறங்கியது. இதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து, அவர்களில் யாருக்கேனும் காய்ச்சல், உடலில் கொப்புளங்கள் போன்ற மாற்றங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.
இவ்விமானத்தில் சென்னை வந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவரின் முகத்தில் கொப்புளங்கள் இருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அப்பயணியை வெளியே விடாமல், அவரை தனிமைப்படுத்தி விசாரித்தனர். விசாரணையில், அவர் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்று திரும்பியுள்ளார். அங்கு விற்ற அழகுசாதன கிரீமை முகத்தில் தடவியதால் இதுபோன்ற கொப்புளங்கள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவரது விளக்கத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுமையாக ஏற்கவில்லை. இவரது முகத்தில் இருக்கும் கொப்புளங்கள், குரங்கம்மை நோய் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் வடமாநில பயணியை தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தனி சிறப்பு வார்டில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.
கொழும்பிலிருந்து சென்னை வந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணியை சந்தேகத்தின்பேரில், சென்னை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை முடிவில்தான் முழு விவரங்களும் தெரியவரும். அவருக்கு குரங்கம்மை நோய்தொற்றுக்கான வாய்ப்பு மிக குறைவு. அவர், இலங்கையில் அழகுசாதன கிரீமை வாங்கி முகத்தில் தடவியதால் கொப்புளங்கள் ஏற்பட்டிருக்கலாம். இதில் பயணிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post சென்னை வந்த விமானத்தில் வடமாநில பயணிக்கு குரங்கம்மை தொற்றா?: மருத்துவமனையில் பரிசோதனை appeared first on Dinakaran.