மின்னணு பயிர் கணக்கீட்டு சாகுபடி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன்தான் பங்கேற்கின்றனர்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

1 month ago 4

சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கிண்டி அறிவியல் நகரத்தில் மின்னணுபயிர் சாகுபடி கணக்கீடு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: விவசாயிகள் சுலபமாக பயிர் கடன் மற்றும் இதர கடன்களை பெறுவதற்கு வங்கிகள் வேளாண் அடுக்கில் சேகரிக்கப்பட்ட மின்னணு தரவுகளின் அடிப்படையில் கடன் வழங்குவதற்கு உதவி புரியும். மின்னணு பயிர் சாகுபடி கணக்கீட்டினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் மட்டும்தான் மின்னணு தரவுகளை அரசு துறைகள் மற்றும் வங்கிகளுக்கு வழங்கிட முடியும். வேளாண்மைத்துறை நடப்பு ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் விவரங்களை முழுமையாக சேகரித்திட முடிவு செய்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வேளாண்மை கல்லூரிகளின் மாணவர்களையும் இக்கணக்கீட்டில் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் சேர்த்துக்கொள்ள முடிவு செய்து 23,000 மாணவ, மாணவிகளையும், 7000க்கும் அதிகமான வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு கடந்த 6ம் தேதி முதல் கணக்கீட்டு பணி நடந்து வருகிறது. இதுவரை 2.5 கோடிக்கு கூடுதலான நிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு இந்த கணக்கீட்டு சாகுபடி செய்யப்படும் பயிர்களை பற்றியும், அவற்றின் வளர்ச்சி பருவங்களை அறிந்து கொள்வதற்கும் களப்பயிற்சியாக அமைந்துள்ளது. மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் மின்னணு பயிர் கணக்கீட்டு சாகுபடியில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவி புரிவதற்கு வேளாண்மைத்துறை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் செல்கின்றனர். எனவே, நடப்பு ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் 100% கணக்கீடு செய்யப்படும். இதன்மூலம் மின்னணு முறையில் தகவல்கள் விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் இதர துறைகளுக்கு மற்றும் வங்கிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இதனால் விவசாயிகள் எளிதில் பயிர் சாகுபடி விவரங்களை பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு துறை செயலாளர் அபூர்வா, வேளாண்மை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் பிரகாஷ், சர்க்கரை துறை இயக்குநர் அன்பழகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post மின்னணு பயிர் கணக்கீட்டு சாகுபடி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன்தான் பங்கேற்கின்றனர்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article