ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே பெரிய ராமாபுரம் பகுதியில் மின் மாற்றியில் பழுதுபார்த்தபோது, மின்சாரம் பாய்ந்து பலியான மின்வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண தொகையாக ரூ10 லட்சத்தை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். ஆர்.கே.பேட்டை அருகே பெரிய ராமாபும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி (25). மின் வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த மாதம் 24ம் தேதி பெரிய ராமாபுரம் பகுதியில் மின் மாற்றியில் பழுதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்து அவர் பரிதாபமாக பலியானார். இதில், நிதியுதவி கிடைக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.காந்தியிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் நிவாரணம் கோரி மனு அளிக்கப்பட்டது.
அதன்பேரில், அமைச்சர் ஆர்.காந்தி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு நிவாரணம் வழங்க கோரினார். பின்னர் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், பெரிய ராமாபுரம் கிராமத்தில் இறந்தவரின் குடும்பத்தினரை, அமைச்சர் ஆர்.காந்தி நேற்று நேரில் சந்தித்து அரசு சார்பில் நிவாரண தொகையாக ரூ10 லட்சம் வழங்கினார். மேலும், ராணிப்பேட்டை விசுவாஸ் பள்ளி தலைவர் கமலா காந்தி சார்பில் ரூ1 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்த நிகழ்வின்போது, திருவள்ளூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சேகர், திருத்தணி செயற்பொறியாளர் பாஸ்கர், ஆர்.கே.பேட்டை உதவி செயற்பொறியாளர் செந்தில், திமுக நிர்வாகிகள் மணி, பழனி ஸ்ரீதர், கவுஷிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி; பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ10 லட்சம் நிவாரண நிதி: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் appeared first on Dinakaran.