
நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையே மின்சாரம்தான். மின்சாரம் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்று சொல்லலாம். மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தால்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். அதனால்தான் மத்திய-மாநில அரசாங்கங்கள் மின்சார உற்பத்தியில் அதிக கவனம் செலுத்திக்கொண்டு இருக்கின்றன. மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்சார நிலையங்களில் நிலக்கரிதான் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின்சார நிலையங்களால் சுற்றுப்புறசூழல் பாதிக்கப்படுகிறது. காற்றில் மாசு ஏற்படுவதால் அது பல உடல்நல கேடுகளுக்கு காரணமாக இருக்கிறது. மேலும் பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டு வரும் நிலக்கரி இருப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு போதுமான அளவு நிலக்கரி உள்நாட்டில் இருந்து கிடைக்காததால் இங்குள்ள அனல் மின்சார நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உலகம் இப்போது பசுமை எரிசக்தியை நோக்கி தன் பார்வையை வீசிவிட்டது. அதாவது காற்றாலை, சூரிய வெப்பம் மற்றும் நீர் மின்நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய உலக நாடுகள் நகர்ந்து கொண்டு இருந்தாலும், அணுசக்தி மின்சார நிலையங்கள் தொடங்குவதிலும் எல்லா நாடுகளும் அதிக அக்கறை காட்டிவருகிறது. தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இடங்களில் அணுசக்தி மின்சார நிலையங்கள் இருக்கின்றன.
அணுமின்சக்தி நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்துக்கு பதிலாக தோரியத்தை பயன்படுத்த அனைத்து நாடுகளும் முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. யுரேனியத்தை போல தோரியமும் பூமிக்கு மேற்பரப்பில் கிடைக்கும் ஒரு தாதுவாகும். யுரேனியத்தின் மூலம் எவ்வளவு மின்சாரம் கிடைக்கிறதோ, அதைவிட 200 மடங்கு அதிகமாக தோரியத்தின் மூலம் கிடைக்கிறது. கதிரியக்க கழிவுகளும் இதில் மிக குறைவாக வெளிப்படும் என்பதால் தோரியம் அணு உலைகளுக்கு மிக பாதுகாப்பானது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தநிலையில், சீனாவின் உள்மங்கோலியா பகுதியில் 10 லட்சம் டன் தோரியம் தாது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தோரியத்தின் மூலம் சீனாவில் அடுத்த 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்று சீனா மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
மேலும் கோபி என்ற பாலைவனத்தில் தோரியம் அணுமின் உலையை சீனா அமைத்துவருகிறது. இந்த அணுமின் உலை 2029-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தோரியம் கிடைப்பதில் இந்தியா, சீனாவுக்கு சளைத்தது அல்ல. இந்தியாவில் மொத்தம் 10.7 லட்சம் டன் தோரியத்தை கடற்கரைகளில் கிடைக்கும் மணலில் இருந்து எடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 2.2 லட்சம் டன் தோரியம் கிடைக்கும் என்று தெரிகிறது. ஆக எதிர்கால மின் உற்பத்தியில் தமிழ்நாடு பெரும் பங்காற்றப்போகிறது. தமிழ்நாடு தவிர ஆந்திரா, ஒடிசா, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் தோரியம் கிடைக்கிறது. சீனா மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளும் தோரியம் அணு உலை ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றன. சீனா எப்படி தோரியம் அணுமின் நிலையத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டதோ, அதுபோல இந்தியாவும் தொடங்கினால் எதிர்காலம் மிகவும் வளமிக்கதாக இருக்கும். தமிழ்நாடும் மிகவும் வளம் பெறும். மொத்தத்தில் மின்சார உற்பத்தியில் தோரியம் புரட்சியை ஏற்படுத்திவிட்டது.