மிதக்கும் நகரம்

4 hours ago 2

 

ப ருவ மழையாகட்டும், கோடை மழையாகட்டும் பெங்களூரு மாநகரம் தத்தளிக்கிறது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்கிறது. தரைத்தள பார்க்கிங், கோயில், அலுவலகம் என்று ஒன்றுவிடாமல் தண்ணீரில் மூழ்கும் அவலம் ஏற்படுகிறது. பெங்களூரு நகரம் மழைக்கு ஏன் இப்படி பாதிக்கிறது. இதற்கு முன்பு இப்படி பாதித்துள்ளதா என்றால், இல்லை என்ற பதில் தான் பெரும்பாலான மக்களிடம் இருந்து வருகிறது.

பெங்களூரு ஒரு உருவாக்கப்பட்ட நகரம். 16ம் நூற்றாண்டில் கெம்பேகவுடா நான்கு கிராமங்களை மட்டுமே உருவாக்கினார். அதை சுற்றி ஏரிகளை அமைத்தார். அதன் பின் மாநகராட்சியாக மாற்றப்பட்டு 741 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. எங்குபார்த்தாலும் அடர்த்தியான மரங்கள், பூங்காக்கள், சுற்றி ஏரிகள் என்று ரம்மியமாக காட்சியளித்த நகரம். எப்போது வெயில் வரும்.

எப்போது மழை வரும் என்று யூகிக்க முடியாத பருவநிலை கொண்ட குளிர்ச்சியான நகரமாக இருந்தது. இதனால் ஐ.டி.நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இந்நகரத்தில் முதலீடு செய்ய விரும்பின. எனவே புறநகர்ப்பகுதிகளில் நிறுவனங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு பெரிய நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகள் பெங்களூருவை முற்றுைகயிட்டன. இதனால் மக்கள் தொகை பெருகியது. எந்த நேரத்தில் மழை பெய்தாலும் நிரம்பி வழியும் ஏரிகள் காணாமல் போகத்தொடங்கியது.

பெங்களூருவை பெருநகர பெங்களூரு என்று அரசு அறிவித்து 1200 சதுர கி.மீ பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்தது. மெட்ரோ ரயில் சேவை, போக்குவரத்து வசதிகள் பெருகின. இதன் விளைவு ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஐ.டி. நிறுவனங்கள், பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் என்று வளர்ச்சி கண்டது. அங்கிருந்த பசுமை, குளுமை, அடத்தியான மரங்கள் காணாமல் போனது. பெங்களூருவில் விடாது மழை பெய்தாலும் பெங்களூரு மையப்பகுதியில் பெரிய வெள்ளபாதிப்பு என்பது இன்றுவரை பார்க்க முடியாது. ஆனால் விரிவாக்கப்பட்ட புறநகர் பெங்களூருவில் தான் வெள்ளபாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

காங்கிரஸ், பாஜ, மஜத ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் மாறி மாறி ஆட்சி செய்த போதிலும் பெருநகர பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவில்லை. மழை வெள்ளத்தால் நகரம் மூழ்கி தத்தளிக்கும் போது மட்டும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. பெங்களூரு வெள்ளத்துக்கு காங்கிரஸ் மீது பழி சுமத்தும் பாஜவினர் அவர்கள் ஆட்சியில் இருந்த போது என்ன வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். பெங்களூரு மாநகராட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் எந்த வார்டிலும் வளர்ச்சிப்பணிகள் நடக்கவில்லை.

தொகுதி மறுவரையறை, கொரோனா, நீதிமன்றத்தில் வழக்கு என்று பெங்களூரு மாநகராட்சிக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. எனவே, உடனடியாக தேர்தல் நடத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் பெங்களூரு புறநகர்ப்பகுதிகளில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துரிதமாக நடக்கும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில், சில வார்டுகளை ஒரு குறிப்பிட்ட கட்சியினர் குத்தகைக்கு எடுத்தது போன்று கையில் வைத்துள்ளதால் அதை உடைப்பதற்கு தான் தொகுதி மறுவரையறை போன்ற விஷயங்களை அரசு கையில் எடுத்து தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது என்று அரசியல் நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

The post மிதக்கும் நகரம் appeared first on Dinakaran.

Read Entire Article