மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 11 புதிய டவுன் பஸ் சேவை தொடங்கியது

6 hours ago 1

*11 வழித்தடங்கள் நீட்டிப்பு

*2 வழித்தடங்களில் மாற்றம்

சேலம் : சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு, மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் 11 புதிய பஸ் சேவையை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பொதுமக்கள் பயனடையும் வகையில் பழைய பேருந்துகளை மாற்றம் செய்து, அதற்கு பதிலாக புதிய வகை பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், கிராமப்புறத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்கள் மற்றும் ஏற்கனவே இயங்கி வந்த வழித்தடங்களை நீட்டிப்பு செய்து பேருந்து சேவை கிடைத்திடவும் வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை அடிப்படையில், மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் 11 புதிய பஸ் சேவை வழங்கப்படுகிறது. மேலும், 11 வழித்தடங்கள் நீட்டிப்பு மற்றும் 2 வழித்தடம் மாற்றம் செய்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் சாரதா தேவி, போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, புதிய பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் சேலத்தில் 11 புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, நகர பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வழியாக, ஜங்சன் வரையில் 6 புதிய நகரப் பேருந்துகளும், இடைப்பாடியில் இருந்து கொமராபாளையம் வரையிலும், ஓமலூரில் இருந்து கீரைக்காரனூர் வரையிலும், மேட்டூரிலிருந்து கொளத்தூர், கோவிந்தபாடி வழியாக காரைக்காடு வரையிலும், ஆத்தூரிலிருந்து தலைவாசல் வழியாக ஊனத்தூர் வரையிலும், மேட்டூரிலிருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் வரையிலும் என மொத்தம் 11 புதிய பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சேலம் நகர பேருந்து நிலையத்திலிருந்து பாப்பம்பாடிக்கு சித்தர்கோவில், நல்லணம்பட்டி, இளம்பிள்ளை வழியாக இயக்கப்பட்ட பேருந்து, தற்போது சித்தர்கோவில், காடையாம்பட்டி, இளம்பிள்ளை வழியாக பாப்பம்பாடிக்கும், சேலம் நகர பேருந்து நிலையத்திலிருந்து ஜங்சன் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்போது வேப்பிலைப்பட்டி வரையிலும் என, 2 வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, மேச்சேரியிலிருந்து கீரைக்காரனூர் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்போது ஓமலூரிலிருந்து கீரைக்காரனூர் வரையிலும், நல்லமாத்தியிலிருந்து ஆத்தூர் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்போது நல்லமாத்திலிருந்து கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக ஆத்தூர் வரையிலும், வீ.களத்தூரிலிருந்து ஆத்தூர் வரையில் இயக்கப்பட்ட 2 பேருந்துகள் தற்போது வீ.களத்தூரிலிருந்து வெள்ளையூர் வழியாக ஆத்தூர் வரையிலும், ஆத்தூரிலிருந்து நல்லமாத்தி வரை இயக்கப்பட்ட பேருந்து, தற்போது ஆத்தூரிலிருந்து கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக நல்லமாத்தி வரையிலும் இயக்கப்படுகிறது.

மேலும், ஆத்தூரிலிருந்து பிள்ளையார்பாளையம் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்போது ஆத்தூரிலிருந்து கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக பிள்ளையார்பாளையம் வரையிலும், கைகளத்தூரிலிருந்து தலைவாசல் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்போது கைகளத்தூரிலிருந்து வெள்ளையூர் வழியாக தலைவாசல் வரையிலும், வாழப்பாடியிலிருந்து பேளூருக்கு இயக்கப்பட்ட பேருந்து தற்போது பேளூரிலிருந்து ரங்கனூர் வரையிலும், குறிச்சியிலிருந்து பேளூருக்கு இயக்கப்பட்ட பேருந்து தற்போது பேளூரிலிருந்து ரங்கனூர் வரையிலும் இயக்கப்படுகிறது.

இதேபோல், இடைப்பாடியிலிருந்து ஆணைப்பள்ளம் வரையில் இயக்கப்பட்ட பேருந்து தற்போது ஆணைப்பள்ளத்திலிருந்து கல்லூரல்காடு வரையிலும், மேட்டூரிலிருந்து மூலக்காடு வரையில் இயக்கப்பட்ட பேருந்து தற்போது மேட்டூரிலிருந்து ஆடையூர், மேச்சேரி வழியாக புக்கம்பட்டி வரையிலும், ஜலகண்டாபுரத்திலிருந்து மேச்சேரி வரையில் இயக்கப்பட்ட பேருந்து தற்போது ஜலகண்டாபுரத்திலிருந்து மாதநாய்க்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக மேச்சேரி வரையிலும் என 11 பேருந்து சேவைகள் வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 11 புதிய டவுன் பஸ் சேவை தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article