
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் இன்று மாலை நடைபெற்று வரும் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன மிட்செல் மார்ஷ் - மார்க்ரம் இணை முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஆரம்பம் முதலே கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இதனிடையே அரைசதத்தை கடந்த மிட்செல் மார்ஷ் 81 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த அப்துல் சமத் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வெறும் 21 பந்துகளில் அரைசதம் அடித்த நிக்கோலஸ் பூரன், அதன் பிறகும் தொடர்ந்து அதிரடி காட்டினார். கொல்கத்தா பந்துவீச்சை சிக்சர்களுக்கு பறக்கவிட்ட அவர் 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் லக்னோ 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா களமிறங்க உள்ளது.