
சென்னை,
சென்னை பெருங்குடியில் ஐ.டி. ஊழியரான கேரளாவை சேர்ந்த இளம்பெண் (24) ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் வாயை பொத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்து வாலிபரிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.
பின்னர் வாலிபரிடம் இருந்து விடுபட அவரது கையை கடித்து விட்டு தப்பிக்க முயற்சித்து சத்தம் போட்டு உள்ளார். இந்த சத்தம் கேட்டதும் அப்பகுதியில் கால் பந்து விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் ஒடி வந்தனர். இதை கண்டதும் வாலிபர் ஓடிவிட்டார். பின்னர் இளம்பெண்ணை மீட்ட இளைஞர்கள் போலீசுக்கு தகவல் தந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் வந்து பெண் என்ஜினீயரான கேரள பெண்ணிடம் விசாரித்தனர். அவர் நடந்த சம்பவங்களை விளக்கி கூறினார். இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பி சென்றவர் யார்? என அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது பெண்ணின் பின்னால் சென்ற வாலிபர் பற்றி துப்பு துலங்கியது. அவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த லோகேஷ்வரன் (வயது 24) என்பவர் என தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக நேற்று அதிகாலை 4 மணியளவில் அந்த ஓட்டலுக்கு சென்று அங்கே பதுங்கி இருந்த லோகேஷ்வரனை கைது செய்தனர்.
விசாரணையின்போது போலீசாரிடம் லோகேஷ்வரன் கூறுகையில், "நான் வேலை செய்யும் ஓட்டலுக்கு பெண் என்ஜினீயர் சாப்பிட வருவார். அவரது அழகில் மயங்கிய நான் அடைய வேண்டும் என திட்டமிட்டேன். ஓட்டலுக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து மது அருந்தினேன். இரவு தனியாக நடந்து செல்லும் அந்த பெண் குறித்து ஞாபகம் வந்தது. இதையடுத்து பழைய மாமல்லபுரம் சாலையில் அவர் தனியாக நடந்து சென்ற போது பின்தொடர்ந்தேன்.
அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு அருகே அவர் சென்ற போது வாயை பொத்தி அருகில் உள்ள மறைவான இடத்துக்கு தூக்கி சென்று கற்பழிக்க முயன்றேன். ஆனால் அவர் கூச்சலிட்டதில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன் என வாக்குமூலமாக கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையின் போது, லோகேஷ்வரன் கழிவறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்ததில் இடது கையில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.