
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. லக்னோவில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான மார்கரம் - மிட்செல் மார்ஷ் கூட்டணி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 10 ஓவர்களில் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. மார்க்ரம் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் இந்த தொடக்கத்தை பயன்படுத்த தவறிவிட்டனர். நிக்கோலஸ் பூரன் 9 ரன்களிலும், அப்துல் சமத் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். நிதானமாக ஆடி வந்த மார்ஷ் 45 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் சமத் மற்றும் மார்ஷ் இருவரும் முகேஷ் குமாரின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். அடுத்து ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆயுஷ் பதோனி களமிறங்கினார்.
இறுதி கட்டத்தில் ஆயுஷ் பதோனி (36 ரன்கள்) அதிரடி காட்ட லக்னோ வலுவான நிலையை எட்டியது. முகேஷ் குமார் வீசிய 20-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி ஒட விட்ட பதோனி 4-வது பந்தில் போல்டானார். கடைசி 2 பந்துகள் இருந்த நிலையில் பண்ட் களமிறங்கினார். அதில் முதல் பந்தை வீணடித்த அவர் 2-வது பந்தில் போல்டானார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்துள்ளது. மில்லர் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி களமிறங்க உள்ளது.