மாமியாருக்காக 20 ரூபாய் நோட்டில் எழுதி...சாமியிடம் வினோத கோரிக்கை வைத்த பெண் பக்தர்

3 weeks ago 5

பெங்களூரு,

வாழ்க்கையில் ஏற்படும் இன்னல், கஷ்டங்களுக்காக நிம்மதி தேடி கோவிலுக்கு பக்தர்கள் செல்வார்கள். சிலர் கோரிக்கை நிறைவேற கோவிலின் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துவார்கள். சில கோவில்களில் பக்தர்கள் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும், கடன் பிரச்சினை தீர வேண்டும், குடும்ப பிரச்சினை தீர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தாளில் எழுதி உண்டியலில் போடுவார்கள்.

இந்தநிலையில், கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் வித்தியாசமான முறையில் ஒரு கோரிக்கை வைத்து கோவிலின் உண்டியலில் போட்டுள்ளார். 20 ரூபாய் நோட்டில் "மாமியார் விரைவில் சாக வேண்டும்" என எழுதி சாமியிடம் வினோத கோரிக்கை வைத்து பெண் ஒருவர் கோவில் உண்டியலில் 20 ரூபாய் நோட்டை போட்ட சம்பவம் கர்நாடக மாநிலம் கலபுரகியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா கட்டரகி கோவிலில் பாக்யவந்தி தேவி கோவில் உள்ளது. அப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது உண்டியலில் 20 ரூபாய் நோட்டில் வாசகம் ஒன்று எழுதப்பட்டு இருந்தது. அதனை எடுத்து ஊழியர்கள் பார்த்தனர். அதில், 'தாயே!, என் மாமியார் விரைவில் சாக வேண்டும்' என எழுதப்பட்டிருந்தது. யாரோ பெண் பக்தர் ஒருவர், தனது மாமியார் சாக வேண்டும் என 20 ரூபாய் நோட்டில் எழுதி உண்டியலில் போட்டது தெரியவந்தது. இந்த ரூபாய் நோட்டு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கோவில் உண்டியலில் மொத்தம் ரூ.60 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் இருந்ததாக கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் குத்ரே என்பவர் கூறியுள்ளார்.

இந்த ரூபாய் நோட்டு தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. மாமியாரின் நெருக்கடி தாங்க முடியாத பெண் பக்தர் ஒருவர் அம்மனுக்கு கோரிக்கையாக எழுதி இந்த ரூபாய் நோட்டை உண்டியலில் காணிக்கையாக போட்டுள்ளதாக சமூகதளவாசிகள் கூறி வருகின்றனர்.

Read Entire Article