
திருப்பூர்,
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மும்மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ள பஞ்சலிங்கங்களை சாமி தரிசனம் செய்வதற்கு பிரதோஷ தினத்தன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி நேற்று ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பஞ்சலிங்கங்களுக்கு பால், சந்தனம், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, அரிசி, மாவு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பஞ்சலிங்கேஸ்வரரை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ரவி உள்ளிட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பல்லக்கில் உலா
இதேபோன்று உடுமலை தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம் பெருமான் ரத்தினலிங்கேஸ்வரருக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை கூறியும் சிவன் பாடல்களை பாடியும் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ரத்தினலிங்கேஸ்வரர் ரத்தினாம்பிகை அம்மனுடன் பல்லக்கில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் மங்கள வாத்தியம், சங்கொலி, கைலாச வாத்தியம் முழங்க உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அமரபுயங்கரீஸ்வரர்
உடுமலை பிரசன்ன கோவில், ருத்ரப்பா நகர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ் பெற்ற அமரபுயங்கரீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு அமரபுயங்கரீஸ்வரருக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில் மேற்கு முகமாய் அமர்ந்து ருத்ரகோடீஸ்வரராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நேற்றுபிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக ருத்ரகோடீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் 108லிட்டர் பால் மற்றும் தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் ஒரே நேரத்தில் சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள், செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்க வல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவில், கோவில்வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில், பூவனூர் கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், பழைய நீடாமங்கலம் சுந்தரேஸ்வரர் கோவில், அரவூர் கார்கோடகேஸ்வரர் கோவில், வையகளத்தூர் கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அதேபோல, புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலிலும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.