
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே, நேற்று காலை அரக்கோணம் - சென்னை மார்க்கத்தில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது.
இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மின்கம்பியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் மின்கம்பி சரி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
அதேவெளை, மின் கம்பி அறுந்து விழுந்ததில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், கோவையில் இருந்து சென்னை சென்டிரல் வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்சல் - சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய 3 ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
மின்கம்பி சீரமைக்கப்பட்ட பின்னர் இந்த ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்னை சென்டிரலுக்கு புறப்பட்டு சென்றன. ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்தனர்.