மாமல்லபுரம் அருகே கரை ஒதுங்கிய குடிநீர் குழாயை கடலுக்குள் நகர்த்தும் பணி தீவிரம்: 2வது நாளாக மீனவர்கள் கடும் அவதி

11 hours ago 3

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட பேரூர் பகுதியில் ரூ.4,276.44 கோடி மதிப்பில் சுமார் 85.5 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் கடல் நீரை குடிநீராக்கும் 3வது ஆலையின் கட்டுமான பணி போர்க்கல அடிப்படையில் நடந்து வருகிறது. இந்நிலையில், 3வது ஆலைக்கு கடல் நீரை கொண்டு வகுவதற்காக கடந்த வாரம் ராட்சத கிரேன் மூலம் பைப் லைன் புதைக்கும் பணி நடந்தது.

இந்நிலையில், நேற்று காலை பலத்த கடல் சீற்றம் காரணமாக அங்கு புதைக்கப்பட்ட சுமார் 1500 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத குழாய்கள் திடீரென கரை ஒதுங்கியது. தகவலறிந்து அப்பகுதி மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் அவதிபட்டனர். மேலும், கரை ஒதுங்கிய ராட்சத குழாய்களை கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பொக்லைன் மற்றும் ராட்சத கிரேன் மூலம் கடலுக்குள் நகர்த்தும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். ஆனாலும், ராட்சத குழாய்களை கடலுக்குள் நகர்த்த முடியவில்லை.

ராட்சத குழாய்கள் கடலுக்குள் நகர்த்தப்படாமல் கரை பகுதியில் வெறுமனே கிடப்பதால், பேரூர் மற்றும் நெம்மேலி குப்பம் மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்ல முடியாமல் சிரமமப்பட்டனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், ராட்சத குழாய்களை கடலுக்குள் நகர்த்தும் வரை, கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம், தினமும் குடும்ப அட்டை வீதம் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்க முன் வரவேண்டும் எனவும், உடனடியாக சம்பந்தப்பட்ட சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கடல் சீற்றம் காரணமாக அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியதா? அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறா என விளக்கி போர்க்கால அடிப்படையில் கடலுக்குள் நகர்த்தும் பணியை தொடங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் அருகே கரை ஒதுங்கிய குடிநீர் குழாயை கடலுக்குள் நகர்த்தும் பணி தீவிரம்: 2வது நாளாக மீனவர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article