மாபெரும் அரசியல் அமைப்புக் கோட்பாடுகளை உருவாக்கியவர் அம்பேத்கர் - நயினார் நாகேந்திரன் புகழாரம்

1 month ago 9

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அம்பேத்கர் ஜெயந்தியின் இந்த அற்புதமான நாளில் பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சமூக நல்லிணக்கம், பொதுமைப் பண்பு, சட்டம் மற்றும் தொலைநோக்குடன் கூடிய சமூகப் பார்வை ஆகியவற்றை நினைவுகூர்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

பல நூற்றாண்டுகளாக, பாரத தேசத்து மக்களைப் பண்படுத்தக் கூடிய மக்களை நெறிப்படுத்தக்கூடிய ஓர் அரசமைப்பு இல்லாத காலகட்டத்தில் பிறப்பு, இனம், மொழி, மத, சாதி பேதமின்றி அனைத்து மக்களையும் பாகுபாடுகள் ஏதுமின்றி ஒன்றிணைத்து, நம் தேசத்தையும் சமூகத்தையும் நல்வழிப்படுத்தக்கூடிய மாபெரும் அரசியல் அமைப்புக் கோட்பாடுகளை அம்பேத்கர் தலைமையேற்று உருவாக்கினார்.

"வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்" என்ற அவரின் மகத்தான சிந்தனை நம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் வழிகாட்டுதலாக ஏற்கவேண்டிய அரிய கருத்தாகும்.

சாதி ஒழிப்பு குறித்த இடையறாத விழிப்புணர்வை ஊட்டிய பாபாசாகிப் உருவாக்கிய சமூக, அரசியல், மற்றும் சமுதாயப் போராட்டங்கள் அனைத்துமே ஜனநாயகத்தன்மை கொண்டவையாகவும், அரசியல் சாசனச் சட்டத்துக்குட்பட்டேயும் இருந்தன. அறச்சீற்றத்தின் அடிப்படையில் போரடித் தீர்வு காண்பதில் அண்ணல் அம்பேத்கர் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் நிலைமாற்றி அவர்களை முன்னேற்றும் வகையில் பஞ்சதீர்த்தா, சட்ட சீர்திருத்தங்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் மறுவாழ்வுத் திட்டங்கள், என்று மத்திய அரசும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களும் ஆறும் பணிகளை மக்களிடம், கொண்டு சேர்க்கும் வகையில் நாம் பணியாற்ற, இந்நன்னாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article