சென்னை : மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா? தமிழ்நாட்டில் திரு.மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!
ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி முதலமைச்சர் அவர்கள் ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் அதை தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே?,”இவ்வாறு தெரிவித்தார்.
“தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயற்சி” – அமைச்சர் ரகுபதி
மேலும், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது. இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை பெரிய விவகாரமாக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம்”,”இவ்வாறு கூறினார்.
The post மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார் : அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.