மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளா..? - கண்டனம் தெரிவித்த வைகோ

3 hours ago 2

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) கீழ் தனியார் பள்ளிகள் தொடங்க அந்தந்த மாநிலத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட வேண்டும். குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த சான்றிதழ் மாநில அரசிடம் இருந்து பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே தனியார் பள்ளி தொடங்க சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

இந்நிலையில், விதிமுறைகளில் திருத்தம் செய்து, ஒரு அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2026-27 கல்வி ஆண்டு முதல் மாநிலங்களில் சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்க வேண்டும் என்றால், அதற்கான தடையில்லா சான்றிதழ் மாநில அரசிடம் இருந்து பெற வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்க மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என புதிய திருத்தத்தை சி.பி.எஸ்.இ. கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் மாநில அரசிடம் இருந்து பெறப்படும் தடையில்லா சான்றிதழ் இல்லாமலேயே இனி பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. மேலும், புதிய திருத்தத்தின் படி, தடையில்லா சான்றிதழ் பெறாமல் பள்ளி தொடங்க விண்ணப்பம் பெறப்படும் நிலையில், சிபிஎஸ்இ சம்மந்தப்பட்ட மாநில அரசுக்கு ஆட்சேபனை ஏதேனும் உள்ளதா? என்ற கடிதத்தை அனுப்பும். அதற்கு மாநில அரசு 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அப்படி பதில் ஏதும் பெறப்படாத நிலையில், மீண்டும் அந்த மாநில கல்வித்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பப்படும்.

அதற்கு கல்வித்துறை 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இதிலும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை எனில், மாநில அரசிற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என எடுத்துகொள்ளப்படும். மேலும், பள்ளி தொடங்க அனுமதி கேட்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மத்திய இடைநிலை கல்வி வாரியம், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்குவதற்கு நேரடியாக அனுமதி வழங்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வித்துறையில் மத்திய அரசு எதேச்சதிகாரமாக ஆதிக்கம் செலுத்துவது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு வேட்டு வைக்கும் நடவடிக்கையாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிடில் 5000 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டல் விடுத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ. விதிமுறைகளில் திருத்தம் செய்து அறிவிப்பு வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழி திட்டத்தையும் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்குவதற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை என்று விதிகளை திருத்துவது மத்திய பா.ஜ.க. அரசின் இந்தி திணிப்பிற்கான இன்னொரு செயல் திட்டம் தான் என்பதில் ஐயமில்லை. எனவே மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க முயற்சிப்பதை முறியடிப்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article