
புதுடெல்லி,
கர்நாடகாவில் அரசு ஊழியர் ஒருவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மாநில லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை நடத்தாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறி இந்த வழக்கை மாநில ஐகோர்ட்டு ரத்து செய்தது.
இதை எதிர்த்து மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் திபாங்கர் தத்தா, சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர் கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், மேற்படி அரசு ஊழியர் மீதான வழக்கை விசாரிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் கூறியதாவது:-
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்படும் எல்லா வழக்குகளுக்கும் முதல்கட்ட விசாரணை கட்டாயம் இல்லை. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள் உட்பட சில வகை வழக்குகளில் முதல்கட்ட விசாரணை தேவைதான் என்றாலும், அது குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையோ அல்லது வழக்கைப்பதிவு செய்வதற்கான கட்டாய முன் நிபந்தனையோ அல்ல.
முதல்கட்ட விசாரணையின் நோக்கம், பெறப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பது அல்ல. மாறாக அந்தத் தகவல் ஒரு குற்றச் செயலைச் செய்ததை வெளிப்படுத்தியதா? என்பதைக் கண்டறிவது மட்டுமே. ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து, ஆரம்ப விசாரணை அவசியமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.
வழக்கு தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் ஒரு ஆதாரத்தை கைப்பற்றினால், அது விரிவானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால், மேலும் முதல் பார்வையிலேயே வெளிப்படையாக குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் முதல்கட்ட விசாரணையைத் தவிர்க்கலாம். இந்த விவகாரத்தில், முதல்கட்ட விசாரணை நடத்தாததற்காக வழக்கை ரத்து செய்ததன் மூலம் கர்நாடக ஐகோர்ட்டு தவறு செய்து இருக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.