
காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலீபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு பிறகு, அங்கு பெண்களுக்கான சுதந்திரம் முழுவதுமாக பறிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்கள், சிறுமிகள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து ரேடியோ பேகம் என்ற பெண்கள் வானொலி நிலையத்துக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க ஆப்கானிய பெண்களால் இயங்கும் ஒரு வானொலி ஆகும். இதன்மூலம் அந்த நாட்டின் பள்ளிக்கல்வி பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
எனவே அந்த வானொலியை மீண்டும் இயக்க அனுமதிக்க கோரி தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து பெண்கள் வானொலிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை தலீபான்கள் அகற்றி உள்ளனர்.
இதுதொடர்பாக தலீபான் அரசின் செய்தி மற்றும் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ரேடியோ பேகம்' வானொலி மீண்டும் இயக்கப்பட வேண்டும் என தொடர்ந்து அவர்கள் கேட்டுகொண்டதனால், அதன் மீதான தடை விலக்கப்பட்டு இயக்கப்பட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் அமீரகத்தின் ஊடகத்துறை கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதாகவும், எதிர்காலத்தில் எந்தவொரு விதிமீறல்களிலும் ஈடுபட மாட்டோம் என அந்நிறுவனம் உறுதியளித்ததை தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.