சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவை இப்போது அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்து வழங்குகின்றனர். அதனால், குழந்தைகளுக்கு ஓரளவு தாமதமின்றி மாணவர்களுக்கு உணவு கிடைக்கிறது. இந்த திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் சத்துணவு தயாரிக்கப்படுவதை போல பள்ளிகளிலேயே காலை உணவையும் தயாரித்து வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.
சென்னையில் 356 பள்ளிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது. அவை மொத்தம் 35 மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்களில் காலை உணவை தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. காலை உணவை தயாரிக்கும் பணியை தனியாரிடம் வழங்க கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை மாநகராட்சி முடிவு செய்த போது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து இந்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
ஆனால், எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல், ஏற்கனவே கைவிடப்பட்ட ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்த துடிக்கிறது. காலை உணவுத் திட்டத்தின் நோக்கமே மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சூடான உணவு கிடைக்க வேண்டும் என்பது தான். அதை உறுதி செய்யும் வகையில் காலை உணவுத் தயாரிப்பை தனியாரிடம் விடும் திட்டத்தை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.