மாதவிடாய் தலைவலி இனி இல்லை!

2 months ago 10

பெரும்பாலான நோய்களுக்கு ஆரம்ப அறிகுறியே தலைவலிதான். அதேபோல் பெரும்பாலான தலைவலிகளுக்கு நரம்பு மண்டலம்தான் காரணி. தலைவலியை ஆரம்பத்திலேயே தடுக்க வழிமுறைகள் சொல்கிறார் டாக்டர் கே. பானு (Clinical Lead – neurology)

தலைவலி காரணிகள் என்னென்ன?

விபத்து, பிரைன் டியூமர் அல்லது நரம்பு மண்டலத்தில் இரத்தக் கசிவு, மூளையில் இரத்தக் கசிவு இதன் மூலம் வரும் தலைவலிக்கு சரியான சிகிச்சை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். அதில் அலட்சியம் கூடவே கூடாது. அதேசமயம் மற்ற தலைவலிகளான குறிப்பாக வேலை நிமித்தமாக, மன அழுத்தம், மன உளைச்சல், கடினமான வாசனை, டென்ஷன் உள்ளிட்ட பிரச்னைகளால் ஏற்படும் தலைவலிகளுக்கு முதலில் தீர்வு நாம்தான் காண வேண்டும். குறிப்பாக எந்தெந்த வேளையில் தலைவலி ஏற்படுகின்றன என்பதை கண்டறிய வேண்டும். அப்படியான பிரச்னைகளை ஆரம்பம் முதலே ஒதுக்குவது நல்லது. சிலருக்கு மலர்கள், சாம்பிராணி வாசனை, வாசனை திரவியம் கூட தலைவலி உண்டாக்கும். இதெல்லாம் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது’.

தலைவலிக்கும் நரம்பு மண்டலத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லுங்க?

முகத்தில் ‘கண், காது, மூக்கு, பல் இவைக்கும் நரம்புகள்தான் அடிப்படை. இந்த உறுப்புகளில் பிரச்னைகள் உண்டானால் கூட தலைவலிதான் உடன் பிரச்னையாக சேர்ந்துகொள்ளும். குறிப்பாக சைனஸ், ஜலதோஷம், காய்ச்சலுக்குக் கூட தலைவலி உண்டாவதன் காரணம் இதுதான். மேலும் சிலருக்கு மூளை பிறப்பிலேயே சின்னச் சின்னப் பிரச்னைகளுக்குக் கூட அதிகம் யோசித்து டென்ஷன் ஆகும். இவர்களும் ஆரம்பம் முதலே யோகா, சுவாசப் பயிற்சி என மேற்கொள்வதால், மூளையின் செயல் களைக் கட்டுப்படுத்தலாம். முடிந்தவரை வாழ்க்கை முறையில் மாற்றம், சீரான தூக்கம், சாப்பாடு என எடுத்துக்கொண்டாலே உடலின் அத்தனை தசைகளும், நரம்புகளும் சீரான நிலைக்கு மாறிவிடும். சிலருக்கு மாதவிடாய் கால தலைவலிகள் கூட வருவதுண்டு காரணம் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து மீண்டும் அதிகரிப்பதால் அது தலைவலியை உண்டாக்கும்.

நரம்புசார் சிகிச்சை முறைகள் என்னென்ன உள்ளன?

‘எல்லா வகையான தலைவலிக்குமான சிகிச்சைகள் சிறப்பான முறையில் உள்ளன. மேலும் மைக்ரேன் தலைவலிக்கு தொடர் மாத்திரைகள் மூலமோ அல்லது மாதம் ஒருமுறை ஊசி மூலமாகவோ கூட சிகிச்சைகள் பெறலாம். சில நரம்பியல் பிரச்னைகளுக்கு சீரான சிகிச்சை முறையே நல்லது. அதேபோல் எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென வரும் கடினமான தலைவலிக்கு மூளை பாதிப்பு இரத்தக் கசிவு என பல காரணங்கள் இருக்கலாம். இவையனைத்திற்கும் ஆரம்ப கட்ட யோகா துவங்கி, நவீன சிகிச்சைகள் உட்பட பல சிகிச்சைகள் இன்று மருத்துவ உலகில் உள்ளன.

மாதவிடாய் தலைவலி உண்டாகக் காரணம் என்ன?

பொதுவாக உடலின் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவின் மாற்றங்கள்தான் தலைவலி உண்டாகக் காரணம். மாதவிடாய் சுழற்சியின் போது ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைந்து சிலருக்கு மீண்டும் மாதவிடாய் மூன்று நாட்கள் முடிந்து சுழற்சி ஆரம்பிக்கும் போது தலைவலி குறைந்து சரியாகும். சிலருக்கு மாதவிடாய் துவங்கும் போதும், முடியும் போதும் தலைவலியும், சிலருக்கு அந்த மூன்று நான்கு நாட்களும் தொடர் தலைவலிகளும் இருக்கும். நிறைய நீர் அருந்துவது முக்கியம். உடல் சூடானாலும் அல்லது நீர் சக்தி இழப்பு ஏற்பட்டாலும் கூட சிலருக்கும் தலைவலி உண்டாகும். அதிலும் சிலருக்கு தாங்கவே முடியாத அளவிற்கு தலைவலி இருக்கும். சிலருக்கும் ஆரம்பநிலை மெனோபாஸ் காரணமாகவும் கூட தலைவலி உண்டாகலாம்.

மாதவிடாய் கால தலைவலிக்கு எளிய முறை தீர்வுகள் என்ன?

மாதவிடாய் நாட்களில் நல்ல உடற் பயிற்சி வழக்கத்தை வைத்திருப்பது தலைவலியை சமாளிக்க உதவும். தியானம், யோகா, சுவாசப் பயிற்சிகள் செய்வது உங்கள் தசைகளை தளர்த்தி இறுக்கத்தை குறைக்க தலைவலி குறையும். ஒரு துணியில் சில ஐஸ் க்யூப்களை எடுத்துக்கொண்டு நெற்றியில் வைக்கவும். 10 நிமிடங்களில் உங்களுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் 10 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் செய்து பாருங்கள். சாலட், க்ரீன் டீ, ஸ்ட்ராங்கான காபி, பழங்கள் அல்லது பழச்சாறு அருந்த நிவாரணம் கிடைக்கும். எல்லாவற்றையும் விட ஓய்வும், நல்ல உறக்கமும் அவசியம். ஆரம்ப நிலை மெனோபாஸ், தலைவலியுடன் அதிக இரத்தப் போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
– ஷாலினி நியூட்டன்.

The post மாதவிடாய் தலைவலி இனி இல்லை! appeared first on Dinakaran.

Read Entire Article