மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் ‘பாலாறு’ மெட்ரோ சுரங்க இயந்திரம் ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது

1 month ago 10

சென்னை, அக்.10: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு 3 வழித்தடங்களுடன் 2ம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. வழித்தடம் 3ல், சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சிறுவாணி மற்றும் பாலாறு என்ற 2 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 708 மீட்டர் ஆகும். சுரங்கம் தோண்டும் இயந்திரம் சிறுவாணி, கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டெர்லிங் சாலையை வெற்றிகரமாக வந்தடைந்தது. இதற்கிடையில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு கடந்த ஜனவரியில் சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு நேற்று ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது.

சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு, பூமிக்கு அடியில் களிமண், மணல் மற்றும் பாறை பிரிவுகளையும், மேலும், சேத்துப்பட்டு மாநகராட்சி பள்ளி, சேத்துப்பட்டு தோபி காட், கருகாத்தம்மன் கோயில் மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கடைகள் ஆகிய இடங்களையும் கடந்து வந்துள்ளது. இருப்பினும், பல குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டமைப்புகளின் கீழ் நடைபெறும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் செயல்பாடுகளை அறியாமலே இருந்தனர், இது வேலையின் துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது.

குறிப்பாக சுரங்கப்பாதைக்கு மேலே 6 மீட்டர் களிமண்ணுடன் 52 மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றின் அடியில் கடந்தது சவாலாக இருந்தது. இந்த நுட்பமான செயல்பாடு குறைபாடற்ற முறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. மேலும், இந்த சுரங்கப்பாதை பணிகளை முடிக்க 260 நாட்கள் ஆனது. இந்நிகழ்வை, சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர் சகாய் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கோனேரு பவானி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

The post மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் ‘பாலாறு’ மெட்ரோ சுரங்க இயந்திரம் ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article