* முக்கிய சாலைகள் ஆட்கள் நடமாட்டம் குறைந்தது, மாலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி
சென்னை: கத்திரி வெயில் தொடங்கிய முதல்நாளான நேற்று சென்னையில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்தது. இதன் காரணமாக சென்னைவாசிகள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கினர். மாலை நேரத்தில் திடீரென பெய்த மழையால் மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர். தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்ததது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வெயிலின் தாக்கத்தால் மக்கள் காலை 11 மணிக்கு மேல் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க தொடங்கினர். வீடுகளிலேயே முடங்கிய காட்சியை காண முடிந்தது. வேலூர், திருச்சி, நாகப்பட்டினம், கரூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிமாக இருந்தது. இந்த நிலையில் வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படுகின்ற கத்தரி வெயில் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய கத்திரி வெயிலின் தாக்கம் வரும் 28ம் தேதி வரை நீடிக்கிறது.
அதாவது, 25 நாட்கள் கத்திரி வெயில் வாட்டி வதைக்க உள்ளது. கத்திரி வெயிலில் தொடங்கிய முதல் நாளிலேயே பல மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியது. குறிப்பாக சென்னையை பொறுத்தவரை நேற்று காலை 8 மணி முதல் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. 11 மணிக்கு மேல் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. வெளியில் நடந்து சென்றால் மயக்கம் அடையும் அளவுக்கு வெயிலின் உக்கிரம் இருந்தது.
சிறிது நேரத்திலேயே உடல் முழுவதும் வியர்த்து அணிந்து இருக்கும் உடையை தொப்பு, தொப்பு என்று ஈரமாகும் அளவுக்கு வெயில் வாட்டி எடுத்தது. பஸ், ரயில்களில் சென்றவர்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிக்குள்ளாகினர். அந்த அளவுக்கு அனல் கக்கியது. இருக்கையில் உட்கார முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது. ஜன்னல் வழியாக அனல் காற்று கக்கியது. குடை இருந்தால் மட்டுமே கொஞ்சம் வெளியில் செல்லலாம் என்ற அளவில் தான் சென்னையில் நேற்று வெப்பத்தின் தாக்கம் இருந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். அனைவரும் வீட்டில் இருப்பது வழக்கம். இந்த விடுமுறை தினத்தை பயன்படுத்தி மக்கள் வெளியில் செல்வது வழக்கம். ஆனால் அடித்த வெயிலால் மக்கள் வீடுகளுக்கு வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். பிற்பகல் வேளையில் சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. வாகனங்களில் எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலுக்கு இதமான பழங்கள் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. சாலையோரங்களில் தர்பூசணி, கிர்ணி பழம், சாத்துக்குடி, வெள்ளரிக்காய், இளநீர் போன்றவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்கி சென்றனர். காலை முழுவதும் வெயில் கொடுமையால் சிக்கி தவித்த மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் மாலை 4 மணியளவில் வானிலை மாறியது.
அதாவது மாலை 4 மணியளவில் சென்னை முழுவதும் இருள் கவ்வியது. அதே நேரத்தில் பயங்கர இரைச்சலுடன் பலத்த காற்று வேறு வீசியது. இதனால், மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு 5 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டது. வெயிலில் சிக்கி தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை அளித்தது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் இயற்கை காற்றை அனுபவிக்கவும், பொழுதை போக்குவதற்காகவும் மாலை நேரத்தில் கடற்கரை, பூங்காக்களில் குவிய தொடங்கினர். இதனால், மாலை 6 மணிக்கு மேல் சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்நகர் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேரம் ஆக, ஆக கடற்கரை முழுவதும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. இரவு 9 மணி வரை கடற்கரையில் பொழுதை போக்கிய பின்னரே மக்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதே போல சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் அங்கேயே கொண்டு வந்த உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர். இரவே மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று ஒவ்வொரு மாவட்டம் நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் காலையில் மக்களை வாட்டி வதைத்த வெயில் விடுமுறை தினத்தை கொண்டாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கிய மக்கள்: பஸ், மின்சார ரயில் பயணம் செய்தவர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.