சென்னை: மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5ம் தேதி, 42வது வணிகர் தினத்தன்று வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு, மதுராந்தகம் பகுதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தலைமை தாங்குகிறார்.
மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், முன்னிலை வகிக்கின்றனர். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அனைவரையும் வரவேற்கிறார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா மாநாட்டு தீர்மானங்களை வாசிக்க உள்ளார். மாநில துணைத்தலைவர் பிரபாகரன் நன்றியுரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வணிகர்களுக்கு விருதுகள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். இந்த மாநாடு நடைபெற உள்ள மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி தலைமைச் செயலகம் வடிவிலான பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கோட்டை வடிவில் முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள மூன்று லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில, மாவட்ட நிர்வாகிகளும், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், மாநில துணைத்தலைவர் அப்துல் சமத், மாவட்ட செய்தி தொடர்பாளர் பவித்ரா சீனிவாசன், விழா குழுவினர் ராஜசேகரன், ரத்னா சுதாகரன், ஜவுளி ராஜா, பாலகிருஷ்ணன், பஜாஜ் ராஜா, கஸ்தூரி சீனிவாசன், தணிகைஅரசு உள்ளிட்ட விழா குழுவினரும் செய்து வருகின்றனர்.
5 லட்சம் கடைகள் அடைப்பு: பல்வேறு வணிகர் சங்கங்களின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக பெரும்பாலான வணிகர்கள் கடைகளுக்கு விடுமுறை விடுத்து குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர். வணிகர் தினத்தையொட்டி சென்னையில் மயிலாப்பூர், அண்ணாநகர், அமைந்தகரை, எழும்பூர் உள்பட பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட உள்ளது. குறிப்பாக மளிகை கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று தெரிகிறது. பெரும்பாலான ஓட்டல்களும் இயங்காது என்று தெரிகிறது. மொத்தத்தில் இன்று தமிழகம் முழுவதும் 5 லட்சம் கடைகள் இயங்காது.
The post மதுராந்தகத்தில் இன்று வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.