மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை.. பள்ளியில் ஆசிரியைகள் செய்த கொடூரம்

11 hours ago 3

தானே,

மும்பையை அடுத்த தானே அருகே உள்ள சாகாப்பூரில் ஆர்.எஸ்.தமானி என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் மாணவ, மாணவியர் ஏராளமானோர் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்தப்பள்ளியில் உள்ள கழிவறையில் ரத்தக்கறை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி பள்ளி ஆசிரியைகளிடம் தகவல் கூறப்பட்டது. இதற்கு காரணமானவர் யார்? என்பதை கண்டறிய 5 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கூட்ட அரங்கத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

யாரும் உண்மையை ஒப்புக்கொள்ளாததால், 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் பலரை கழிவறைக்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோரிடம் கூறினர்.

ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று பள்ளிக்கு சென்று இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினர். மேலும் போலீசில் புகார் அளித்ததன் பேரில் பள்ளி முதல்வர், ஆசிரியைகள், பெண் உதவியாளர் மற்றும் அறங்காவலர்கள் உள்பட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 7-ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கூறுகையில், "என் மகள் நடுங்கியபடி வீட்டிற்கு வந்தாள். மற்ற மாணவர்கள் முன்னிலையில் கழிவறையில் தனது ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக அவள் என்னிடம் கூறினாள். இது ஒழுக்கம் அல்ல, மனரீதியான துன்புறுத்தல்" என்றார்.

மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article