
சென்னை,
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கடந்த 7ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றுப் பயணம் தொடங்கினார்.
கோவை வடவள்ளியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கோயிலைக் கண்டாலே திமுக அரசுக்கு கண்ணை உறுத்துகிறோம். கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? மக்கள் இதனை சதிச் செயலாகவே பார்க்கிறார்கள். ஏன் அரசுப் பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியதுதானே?" என்று குறிப்பிட்டு இருந்தார். கோயில் நிதி தொடர்பாக பாஜக பேசி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு விமர்சனத்திற்குள்ளானது.
இந்த நிலையி, தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ள எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- அறநிலையத் துறையில் இருந்து நிதி தரவேண்டாம் என்று கூறவில்லை. அவ்வாறு செய்தால், மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினேன். அறநிலையத் துறையின் நிதியின் மூலம் கல்லூரிகள் அமைக்கப்பட்டால், மாணவர்களுக்கு உரிய முழு நிதியும் கிடைக்காது என்பதை திரித்து, அதன்மேல் கண், காது, மூக்கு வைத்து பேசுகிறார் மு.க. ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியில் 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகள், 4 சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. ஏழைகளின் மருத்துவர் கனவை அதிமுக அரசு நிறைவேற்றியது. உங்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியாவது கொண்டு வரப்பட்டதா?" இவ்வாறு பேசினார் .