
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகக்கூறி, தடையை மீறி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கத்தியவாடி கூட்ரோடு பகுதியில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உட்பட 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிடங்கள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு, ஒருபகுதி திறக்கப்படாமல் இருப்பதுடன், சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.