மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

9 hours ago 1

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 54). அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவர், கடந்த 2023-ம் ஆண்டு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மாணவிகளுக்கு மிரட்டலும் விடுத்தார். ஒரு கட்டத்தில் தலைமை ஆசிரியரின் பாலியல் தொல்லையை தாங்க முடியாத மாணவிகள், இதுபற்றி பெற்றோரிடம் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது புகார் அளித்தார். அதன்பேரில் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி வேல்முருகன் வழக்கை விசாரித்தார். மேலும் அனைத்து சாட்சியங்களும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Read Entire Article