
வாஷிங்டன்,
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் தணிய வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் லிவிட் கூறியதாவது, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் விரைவில் தணிய வேண்டுமென ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விரும்புகிறார். ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்புக்கு முன்பு பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. ஆனாலும், இரு நாடுகளின் தலைவர்களுடனும் ஜனாதிபதி டிரம்ப் சிறப்பான உறவு வைத்துள்ளார். மோதலை முடிவுக்கு கொண்டுவருமாறு இரு நாடுகளின் தலைவர்களிடமும் வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ வலியுறுத்தி வருகிறார்' என்றார்.