
சென்னை,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 3வது நாளாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இந்திய பாதுகாப்புப்படையால் முறியடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவிட்டுள்ளார். பாலஸ்தீன எழுத்தாளரும், கவிஞருமாக மஹ்மூத் தர்விஷின் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
"போர் முடிவடையும்.
தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள்.
தாய் தனது தியாக மகனுக்காகக் காத்திருப்பாள்.
பெண் தனது அன்பான கணவருக்காகக் காத்திருப்பாள். குழந்தைகள் தங்கள் ஹீரோ தந்தைக்காகக் காத்திருப்பார்கள்.
நமது தாயகத்தை விற்றவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது, ஆனால் அதற்கு விலை கொடுத்தவர்களை நான் பார்த்தேன்"
சியோனிச போராளிகளால் தங்கள் தாயகத்தை இழந்த பாலஸ்தீனியர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக பாலஸ்தீன எழுத்தாளர் இந்த கவிதையை எழுதியிருப்பார்.