மாணவி வன்கொடுமை - சிறப்பு குழுவின் விசாரணை தொடக்கம்

3 weeks ago 7

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் அமைப்புகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க உத்தரவு பிறப்பித்தது. மேலும் 25 லட்ச ரூபாய் மாணவிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா தலைமையில் ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகிய மூன்று அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணையை துவங்கி உள்ளது. இதன்காரணமாக பாலியல் வன்கொடுமை வழக்கு ஆவணங்கள் எப்.ஐ.ஆர் வெளியான ஆவணங்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலையத்திலிருந்து மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணங்களை பெற்று விசாரணையை அடுத்த கட்டமாக மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மட்டுமல்லாது முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம் தொடர்பாகவும் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வு குழுவிடம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மூலம் மேலும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என பல்வேறு கோணத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிர படுத்த உள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனை ஆய்வு செய்து அதன் மூலம் கிடைக்கும் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தவும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.

Read Entire Article