ரஞ்சி கோப்பை: ரோகித் , ஜெய்ஸ்வால் சொதப்பல்.. முதல் இன்னிங்சில் மும்பை 120 ரன்களில் ஆல் அவுட்

2 hours ago 1

மும்பை,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களான சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை காரணமாக சுமார் 2 மாத காலம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரஞ்சி கோப்பையின் லீக் ஆட்டங்கள் நேற்று மீண்டும் தொடங்கின. இந்திய முன்னணி வீரர்களும் உள்ளூர் தொடர்களில் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற பி.சி.சி.ஐ.-ன் விதிப்படி ரோகித், பண்ட், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த முறை ரஞ்சி கோப்பையில் களமிறங்கினர்.

இதில் மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அடங்கிய மும்பை அணி, ஜம்மு காஷ்மீருடன் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரகானே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின், தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

இந்திய நட்சத்திர வீரர்கள் களமிறங்கியதால் மும்பை பெரிய ரன்களை நோக்கி பயணிக்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் ஜெய்ஸ்வால் (4 ரன்கள்), ரோகித் சர்மா (3 ரன்கள்) சொதப்பினர். அத்துடன் கேப்டன் ரகானே (12 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (11 ரன்), ஷிவம் துபே (0) ஆகிய முன்னணி வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்து அணியை கவுரமான நிலையை எட்ட உதவினா. மும்பை அணி முதல் இன்னிங்சில் 33.2 ஓவர்களில் 120 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 51 ரன்கள் அடிக்க, ஜம்மு-காஷ்மீர் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் உமர் நசிர் மிர், உத்விர் சிங் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜம்மு-காஷ்மீர் அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 42 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. பரஸ் தோக்ரா 19 ரன்களுடனும், யுத்விர் சிங் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மும்பை தரப்பில் மோகித் அவஸ்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Read Entire Article