ராமேஸ்வரத்தில் ஒரு எளிய குடும்பத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாள் பிறந்து நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமைக்குரிய குடியரசுத்தலைவராக உயர்ந்தவர் அப்துல்கலாம். அவரின் வாழ்க்கை மாணவர்களுக்கு என்றும் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.
ஜைனுலாப்தீன் ஆசியம்மா இணையருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தவர் கலாம். இவரது தந்தை ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையே மக்களைப் படகில் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். 1914இல் பாம்பன் பாலம் திறக்கப்பட்ட பிறகு, படகோட்டும் தொழில் பாதிப்படைந்தது. கலாம் பிறந்த நேரத்தில் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் சிறுவனாக இருந்தபோது வீடுகளுக்குச் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியைச் செய்து அதன் மூலம் கிடைக்கும் எளிய தொகையை குடும்பச் செலவுகளுக்குப் பயன்படுத்தி தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். சிறு வயது முதற்கொண்டே கடின உழைப்புக்குச் சொந்தக்காரராய் இருந்துள்ளார் என்பதை இதன்மூலம் அறிகிறோம்.
பள்ளிப் பருவத்தில், கலாம் சராசரி மாணவராகவே இருந்துள்ளார். ஆனால் கல்வி கற்க வேண்டும் என்ற விருப்பம் அவர் ஆழ்மனத்தில் பதிந்திருந்தது. இவர் கணிதப் பாடத்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். ராமநாதபுரம் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வியை முடித்த கலாம், 1954ஆம் ஆண்டு திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். 1955இல் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பை முடித்தார். DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி
மற்றும் வளர்ச்சி அமைப்பில் அறிவியலாளராக பணியில் சேர்ந்தார். பிறகு விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவில் (INCOSPAR) சேர்ந்தார். அங்கு விக்ரம் சாராபாயின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) தும்பா ஏவுதளத்தின் முதல் இயக்குனராக பணியாற்றினார். இவரது ஆராய்ச்சித் திறமையைக் கண்ட இந்திய அரசாங்கம் இவர் தலைமையில் ஒரு கூடுதல் ஏவுகணைத் திட்டத்தைத் தொடங்கியது. பின்னர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
1998இல் இதய மருத்துவர் சோம ராஜுவுடன் இணைந்து ஒரு குறைந்த செலவிலான உறைகுழாயை உருவாக்கினார். இது ‘‘கலாம்-ராஜூ உறைகுழாய்” எனப் பெயரிடப்பட்டது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு குறைந்த எடையுள்ள செயற்கைக் கால்களை உருவாக்கியதில் அப்துல் கலாம் பங்கு குறிப்பிடத்தகுந்தது. அது குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக 20ஆம் பட்டமளிப்பு விழாவில் பேசிய கலாம், “4 கிலோ எடை உள்ள செயற்கைக் கால்களுடன் பிஞ்சுக்குழந்தைகள் நடந்து சென்ற கொடுமையை நானே நேரில் பார்த்து துயரம் அடைந்தேன். இதையடுத்து 4 கிலோவுக்குப் பதிலாக வெறும் 400 கிராமில் செயற்கைக் கால்களை தயாரித்துக்கொடுத்தது தான் நான் செய்த சாதனைகளில் பெருமகிழ்ச்சி அளிப்பது”என்று
குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் மருத்துவத்துறைகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்த அப்துல் கலாமை நாட்டின் குடியரசுத்தலைவராக்கி அவரைப் பெருமைப்படுத்தியது நம் நாடு. 2002 முதல் 2007 வரை இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக பணியாற்றினார். கலாம் ‘‘மக்களின் ஜனாதிபதி” என்று அன்பாக அழைக்கப்பட்டார்.
குடியரசுத் தலைவராகப் பல முன்னுதாரணங்களை நடைமுறைப்படுத்தி எளிமையான குடியரசுத்தலைவராகத் திகழ்ந்தார். எளிய மனிதர்களும் சந்திக்கும் அளவுக்குத் தன்னை எளிமைப்படுத்திக்கொண்டார். நாடு முழுவதும் உள்ள மாணவர்களைச் சந்திப்பதை ஒவ்வொரு பயணத்திலும் கடமையாகக் கருதி அவர்களை ஊக்கப்படுத்திவந்தார். மாணவர்களைச் சந்திப்பதையே மன மகிழ்ச்சியாகக் கருதிய மாமனிதர் அப்துல்கலாம். ‘‘கனவு காணுங்கள்”என்பது அவரது இன்றியமையாத பிரகடனமாக இருந்தது. உறக்கத்தில் வருவதல்ல கனவு உன்னை உறங்கவிடாமல் செய்வதே கனவு என்று கனவுக்கு விளக்கத்தையும் கொடுத்து மாணவர்களின் எதிர்காலக் கனவுகளை வடிவமைக்கத் தூண்டியவர்.
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்து குடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து வெளியேறும்போது எப்படி உள்ளே நுழைந்தாரோ அப்படியே வெளியேறினார். அவருக்கு மக்கள் அளித்த பரிசுகளைக் கூட எடுத்துச் செல்லவில்லை. பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியராகப் பணியாற்றினார். மாணவர் சமுதாயத்தோடு இருப்பதையே எப்போதும் விரும்பினார். எளிய கவிதைகளை அவ்வப்போது எழுதி வந்தார். தனது வாழ்க்கை வரலாற்றை ‘‘அக்னிச் சிறகுகள்”என்ற பெயரில் எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் இந்தியா 2020 என்னும் நூல் குறிப்பிடத்தகுந்ததாகும்.
2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விரிவுரையாற்றியபோதே அவர் உயிர் பிரிந்தது. மரணத்திற்குப் பிறகு அவர் பிறந்த மண்ணில் அவருக்கு அரசு நினைவிடம் எழுப்பி சிறப்பித்துள்ளதோடு பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரதரத்னா போன்ற விருதுகளையும் மரணத்திற்கு முன்பும் பின்புமாக வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது இந்தியா. ஒரு எளிய குடும்பத்தில் வறுமையில் பிறந்து தனது விடா முயற்சியால் கல்வியில் உயர்ந்து நேர்மையோடும் நம்பிக்கையோடும் உழைத்து படிப்படியாக முன்னேறி நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்த அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை நம் மாணவர்களுக்கு சிறந்த படிப்பினையாக அமைகிறது. அதுவும் தமிழ் வழியில் பள்ளிக்கல்வியை பயின்றவர் என்பது தமிழர்களான நமக்குக் கூடுதல் மகிழ்வளிக்கக்கூடிய வரலாறு. மாணவர்கள் அப்துல்கலாம் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள அவரது வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் படிக்கவேண்டும். அதிலிருந்து ஊக்கம் பெற்று தங்களை உயர்த்திக் கொள்ளவேண்டும். அவர் சுற்றுச்சூழலுக்கு ஆற்றிய பணிகளையும் நினைவில் கொண்டு சூழல் மேம்பாட்டுக்கான செயல்களையும் தொடரவேண்டும்.
The post மாணவர்களின் மனம் கவர்ந்த மாமனிதர் அப்துல்கலாம் appeared first on Dinakaran.