மாணவர்களின் பேசுபொருள் மாற வேண்டும்!

2 months ago 11

மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள அதிக நேரம் கிடைக்கிறது. பள்ளிப் பேருந்தில், ஆட்டோக்களில், சைக்கிளில் செல்லும்போதும், சில மாணவர்கள் நடந்தே பள்ளிக்குச் செல்லும்போதும் நேரம் கிடைக்கிறது. பள்ளிகளில் ஒரு பாடவேளை முடிந்து அடுத்த பாட வேளை தொடங்கும் போது, மதிய உணவு இடைவேளை, காலை மாலை இண்டர்வல் ஆகிய நேரங்களில் எல்லாம் நேரம் கிடைக்கிறது. பிறகு மாலை பள்ளி விட்டு வீடு திரும்பும்போதும் மாணவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்ள நேரம் இருக்கிறது. இதுவெல்லாம் மாணவர்கள் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள கிடைக்கின்ற அற்புதமான நேரங்கள். மேலும் இது மாணவர்கள் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நேரம். காலை எழுந்தவுடனே அவர்கள் சுறுசுறுப்பாக வேலைகளைத் தொடங்கிவிட முடியாது. கொஞ்சம் நேரம் சோம்பல் நீடிக்கலாம். அதுபோல இரவு 9 அல்லது 10 மணிக்கு மேல் என்பது மாணவர்கள் உடலும் மனமும் சோர்வுற்றிருக்கக் கூடிய நேரம். மற்ற நேரங்களில் எல்லாம் அவர்கள் உடலும் மனமும் ஆக்டிவாக இருக்கும். இப்படி ஆக்டிவாக இருக்கும் எந்த ஒரு நேரத்தையும் அவர்கள் வீண்பேச்சுப் பேசிக் கழிக்கக்கூடாது. இப்படி ஆக்டிவாக இருக்கும் நேரங்களில் அவர்களின் பேசுபொருள் எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும்? என்பதைத்தான் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்.

பெரும்பாலான மாணவர்களைக் கவனிக்கும்போது அவர்கள் தங்களுக்குள் பேசும் விஷயம் சினிமா. அவர்கள் பார்த்த சினிமா, அதில் வரும் முக்கியமான வசனங்கள், குறிப்பாக பஞ்ச் டயலாக் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறார்கள். சினிமாவில் வரும் பஞ்ச் டயலாக் இவர்களுடைய தினசரி வசனமாக மாறுகிறது. ஒவ்வொரு காட்சிகளாக விவரித்துப் பேசுகிறார்கள். முக்கியமாக புதிதாக வந்த திரைப்படத்தை பற்றிதான் இவர்களுக்குள்ளான பேச்சு இருக்கிறது. அதிலும் அந்தப் படத்தை பார்க்காதவர்களை ஏதோ நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் போல (அவுட் டேட்டட்) மற்றவர்கள் பார்க்கும் பார்வை, திரைப்படம் பார்க்காதவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. இவர்களுடன் உரையாட வேண்டும் என்பதற்காகவே புதிய திரைப்படங்களை பார்க்கிறார்கள். அந்த நடிகர்களைப் பற்றி பேசுகிறார்கள். காட்சிகளை விவாதிகிறார்கள்.

அடுத்தபடியாக அவர்களுடைய டாபிக் விளையாட்டு. அதிலும் முக்கியமாக கிரிக்கெட். ஐபிஎல், உலகக் கோப்பை, 20 ஓவர், பிற நாடுகளுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என்று ஏதாவது ஒரு போட்டி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. அதனால் கிரிக்கெட் பற்றி அதிகம் பேசுகிறார்கள். கிரிக்கெட்டைப் பற்றி ஏதேனும் அப்டேட் தெரியவில்லை என்றால் அந்த மாணவனும் அவுட் டேட்டட் என்பது போல மற்றவர்கள் ட்ரீட் செய்கிறார்கள். இதனால் சில மாணவர்களுக்கு கிரிக்கெட் பிடிக்கவில்லை என்றாலும்கூட கொஞ்ச நேரம் கிரிக்கெட் பார்த்துவிட்டு அதைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.

சினிமா, கிரிக்கெட் இதற்கு அடுத்தபடியாக இவர்களின் பேசும் பொருள் டிவி. டிவியில் வரும் சீரியல்கள், டாக் ஷோ, காமெடி நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பேசிச் சிரிக்கிறார்கள். மாணவர்களின் அடுத்த டாபிக், மாணவிகளைக் கிண்டல் செய்வது, ஏய் உன் ஆளு வந்தாடா பாக்கலையா? ஏன்டா உன் ஆளு இன்னைக்கு வரல? என்பது போன்றுதான் மாணவர்கள் பேசிக்கொள்கிறார்கள். இவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல மாணவிகள். இவர்களும் உன் ஆளைப் பாருடி… உன் ஆள் டிரெஸ்ஸைப் பாருடி… என்று கமெண்ட் பண்ணிக்கொள்கிறார்கள்.

இதற்கு அடுத்தபடியான டாபிக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள். இன்ஸ்டாகிராமில் எத்தனை பேர் லைக் போட்டு இருக்கிறார்கள்? எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள்? முகநூல் பதிவிற்கு எத்தனை பேர் பதில் அளித்து இருக்கிறார்கள்? கமெண்ட் செய்திருக்கிறார்கள்.. என்று பேசி பெருமையடித்துக் கொள்வதோடு, மற்றவர்கள் கமெண்ட் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஏதேனும் புதிது புதிதாக ரீல்ஸ் எடுத்து பதிவு செய்வது, போட்டோ எடுத்து பதிவு செய்வது என்று நேரத்தை வீணடிக்கிறார்கள்.

இதுவரை நான் சொன்ன எந்த ஒரு டாபிக்கும், எந்த ஒரு மையப்பொருளும் கொஞ்சம் கூட உபயோகமானது இல்லை. இதைத்தான் வெட்டிப் பேச்சு என்று சொல்வார்கள். வெட்டிப் பேச்சு வேலைக்கு ஆகாது என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமாகப் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களும் கல்லூரியில் படிக்கும் நாட்களும்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பேஸ்மெண்ட். வாழ்க்கையின் அடித்தளம். பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்றால் பள்ளிப்பருவத்தை மிகச் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளி வகுப்பறையில் கற்றுக்கொள்வதை விட பள்ளிக்கு போகும்போதும் பள்ளியில் இருந்து வரும்போதும் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களின் பேசுபொருள். அறிவியல் முன்னேற்றங்களைப் பற்றிப் பேசலாம். அடுத்தடுத்து என்ன புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன? அது எப்படி மனித வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும்? என்பதைப் பற்றி உரையாடலாம். பாடங்களில் படிக்கும் பாடப்பொருளை எப்படி வாழ்க்கையில் பயன்படுத்துவது என்பதைப் பற்றி (Applied Subject knowledge) மாணவர்கள் பேசலாம். பொருளாதாரம் பற்றிய அறிவை மாணவர்கள் பள்ளியிலேயே தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால்தான் 6ஆம் வகுப்பில் இருந்தே பொருளாதாரப் பாடம் சேர்க்கப்பட்டிருக்கிறது. பணவீக்கம் என்றால் என்ன? பணவாட்டம் என்றால் என்ன? வரிகள் எப்படி விதிக்கப்படுகின்றன? என்பது பற்றியெல்லாம் பேசலாம். என்ன செய்தால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்? என்று பேசலாம்.

அடுத்து அரசியல் பற்றி அவர்கள் பேச வேண்டும். ஏனென்றால் மாணவர்கள் மத்தியில்தான் புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. பெரிய பெரிய பிரச்னைகளுக்கான தீர்வுகள் மாணவர்களிடமிருந்து பிறக்கின்றன. எனவே, மாநில அரசியலில், தேசிய அரசியலில் நிகழவேண்டிய மேம்பாடுகள் குறித்து மாணவர்கள் தங்களுக்குள் உரையாட வேண்டும்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்குத் தங்களால் எப்படிப் பங்களிக்க முடியும்? நெகிழியில்லாத உலகம், மாசுபாடு இல்லாத சுற்றுப்புறம், மாசுபாடற்ற நதிகள் குறித்து மாணவர்கள் சிந்திக்க வேண்டும். பெற்றோர்களிடையே இருக்கக்கூடிய பிணக்குகளை தீர்த்து குடும்பம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? அதற்கு நாம் என்ன செய்யலாம்? என்பதைப் பேசலாம். அதுபோல நமக்கு இருக்கக்கூடிய சமூகக் கடமைகளைப் பற்றியும் பேச வேண்டும். நாட்டின் பொதுச்சொத்துகளை பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்கு அப்படியே பாதுகாப்பாக விட்டுச் செல்வது எப்படி? என்ற தொலைநோக்குச் சிந்தனையில் மாணவர்கள் உரையாடலாம்.

சமூகத்தில் நிலவும் ஜாதி,மத வேறுபாடுகளைக் கடந்து ஒரு சமூக நல்லிணக்கம் எப்படி ஏற்படுத்தலாம்? என்பது பற்றி மாணவர்கள் உரையாட வேண்டும். எந்த ஒரு பொருளுக்கும் வெளிநாடுகளை நம்பியிருக்காமல் தற்சார்புப் பொருளாதாரம் வளர்வதற்கான வாய்ப்புகள் பற்றியும் மாணவர்கள் பேச வேண்டும்.

இவையெல்லாம் பெரிய விஷயங்கள் இல்லையா? அவற்றைப் பற்றி மாணவர்கள் சிந்திக்க முடியுமா? என்று கேட்கலாம். பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமே தீவிரமாக, சிறப்பாக, சிந்திக்க வாய்ப்பு இருக்கிறது. பள்ளி, கல்லூரி வாழ்க்கையைக் கடந்துவிட்டால் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் குடும்பப் பொறுப்பு வந்து விடுகிறது. பெற்றோரைப் பாதுகாக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், தொடர்ந்து திருமணம், குழந்தைகள் என்று ரெகுலர் வாழ்க்கைக்கு வந்துவிடுவார்கள். ஆனால், முற்றிலும் சுயமாகச் சிந்திக்கக்கூடிய பருவம், பள்ளிப் பருவம். அவர்கள் சிந்திப்பதற்கு மூல காரணமாக இருப்பது அவர்களுடைய கலந்துரையாடல். எனவே, மாணவர்கள் பள்ளியில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில், உபயோகமான விஷயங்களைப் பேச வேண்டும்.

இந்த நாட்டின் புதிய மன்னர்கள் மாணவர்கள்தான். சுயநலமில்லாத மக்கள் நல உலகத்தைப் படைப்பதற்கு அவர்களிடம்தான் தீர்வுகள் தோன்றுகின்றன. எனவே, மாணவர்களே சினிமா, கிரிக்கெட், டிவி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றைப் பற்றி பேசி நேரத்தை விரயமாக்காமல் ஆக்கப்பூர்வமாகச் சிந்திப்பதே நல்ல பலன் தரும்.

உங்களை சினிமாவைப் பற்றிப் பேசவே கூடாது என்று சொல்லவில்லை. சினிமாவில் நீங்கள் எப்படி நல்லவிதமான மாற்றத்தை கொண்டு வரலாம் என்று பேசுங்கள். சமூகவலைத்தளங்களில் எப்படி நேர்மறையான சிந்தனைகளைக் கொண்டு வரமுடியும்? என்று பேசுங்கள். நீங்கள் கிரிக்கெட் விளையாடினால் எப்படி நாடு புகழும் வீரராக வர முடியும்? உலகே போற்றும் வீரராக வர முடியும்? என்பதைப் பற்றி உரையாடுங்கள். இனியாவது உங்கள் பேசுபொருளை மாற்றிக்கொள்ள… சிந்தித்துச் செயல்படுங்கள்! இன்னும் படிப்போம்!

The post மாணவர்களின் பேசுபொருள் மாற வேண்டும்! appeared first on Dinakaran.

Read Entire Article