மாணவர்களிடம் கையெழுத்து கிடைக்காமல் தவியாய் தவிக்கும் தாமரை பார்ட்டி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 hours ago 1

‘‘2026 சட்டமன்ற தேர்தலுக்கு சீட் பிடிப்பதற்கான வேலையில் திரைமறைவில் இறங்கியுள்ளார்களாமே மாஜிக்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்ட இலை கட்சியில் மாஜி அமைச்சர்கள் இடையே இருந்து வரும் பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளதாம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இப்பவே சீட் பிடித்து வைப்பதற்கான வேலையில் 2 மாஜி அமைச்சர்கள் திரைமறைவு வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்களாம். கடலோர புறநகர் பகுதியில் தனக்கு எம்எல்ஏ சீட் வேண்டும் என்பதில் மாஜி அமைச்சர் மணியானவர் குறிக்கோளாக உள்ளாராம். இதேபோல் மற்றொரு மாஜி அமைச்சர், கடலோர நகர் பகுதியில் தனக்கு எம்எல்ஏ சீட் வேண்டும் என திரைமறைவில் தலைமையிடத்தில் காய்நகர்த்தி வருகிறாராம். 2026 தேர்தலுக்கு இப்போதில் இருந்தே இரண்டு மாஜியானவர்கள் சீட் பிடிப்பதற்கான காரணம் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க தான் என கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கையெழுத்து வாங்குறதுக்கு படாதாபாடு படறாங்களாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘புரம் என முடியும் கடலோர மாவட்ட மலராத கட்சியில் உள்ள கோஷ்டிப்பூசல் ஊரறிந்த விஷயம். இங்கு மாவட்ட தலைவரை விட முன்னாள் தலைவர் உட்பட சில விஐபிக்களே கட்சியை கண்ட்ரோலில் வைத்துள்ளனர். சமீபகாலமாக, மலராத கட்சியினர் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஊரெல்லாம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் போல, புரம் மாவட்டத்திலும் இதற்கு போதுமான அளவு வரவேற்பு இல்லை. மாணவ, மாணவிகள் இவர்களை கண்டாலே தெறித்து ஓடும் நிலைதான் தமிழ்நாட்டில் உள்ளது. இங்கும் மலராத கட்சி நிர்வாகிகள் பேப்பர், பேனாவுமாய் பல இடங்களில் சுற்றித்திரிகின்றனர். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட யாரும் முன்வரவில்லையாம். பள்ளி, கல்லூரிகள் பக்கமாய் போனால் பிரச்னையாகி விடும் என ஒரு தரப்பினர் ஒதுங்கிக்கொண்டனர். மற்றொரு தரப்போ மாவட்டத்தின் பல இடங்களிலும் தெருத்தெருவாய் சுற்றி வருகின்றனர். ஆனாலும், கொடுக்கப்பட்ட டார்கெட்டில் பாதிக்கு கூட கையெழுத்தாகவில்லையாம். இதனால், நொந்து போய் இருக்க, மற்றொரு தரப்போ தற்போதைய நிர்வாகிகள் கட்சி தலைமையின் முடிவை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்ற கோஷ்டி அரசியலை கையில் எடுத்துள்ளனர்… இதன்மூலம் பிரச்னையை திசை திருப்பி விடலாமென்று திட்டமாம்… கட்சியை வளர்க்கிறாங்களோ இல்லையோ, பிரச்னையை நல்லா வளர்க்கிறாங்கப்பா…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புல்லட்சாமிக்கு எதிராக இலைதரப்பு தீவிரமா இறங்கியிருக்காமே’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலாவுக்கு பெயர் போன புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளியூர்வாசிகள் அதிகளவில் வட்டம் அடிக்கிறார்களாம். போதை வஸ்துக்களின் தாராள புழக்கமும், ரெஸ்ட்டோ பார்களின் திறந்த வாசலுமே இதற்கு முக்கிய காரணமாம். சமீபகால புல்லட்சாமி ஆட்சியின் செயல்பாடுகள் மண்ணின் பண்பாட்டை சிதைத்து வருவதாக கொந்தளிக்கிறதாம் இலைதரப்பு. ஆபாசங்களுக்கு இங்கு எந்த தடையும் இல்லை என்று வெளிப்படையாகவே மலிவு விளம்பரம் செய்யும் கேடுகெட்ட நிலை உலகில் வேற எந்த மாநிலத்திலும் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ள இலை தரப்போ, இதற்கு ஒரு அரசாங்கம் தேவையா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறதாம். குரங்கு கையில் கொடுத்த பூமாலையாக உள்ளூர் மக்கள் அவதிப்படுவதாக மீண்டும் குமுறியுள்ள இலை தரப்பு, மண்ணின் பண்பாட்டை சிதைக்கும் கலாச்சார சீரழிவை தடுத்திடுமாறு யூனியன் பவர்புல் நிர்வாகிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறதாம். ஆக்‌ஷன் இல்லாவிடில் ரியாக்‌ஷனில் இறங்கும் முடிவில் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காக்கி சேதி ஏதுமிருக்கா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘காட்டன் சிட்டியில் மெயின் பஸ் ஸ்டாண்டு பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேசனில் ரைட்டராக இருப்பவர் வசூலில் கொடிகட்டி பறக்கிறாராம். ஸ்டேசனில் வேலை செய்யும் போலீசுக்கு யார் யாருக்கு என்னென்ன டூட்டின்னு ஒதுக்குகிற வேலையோட யார் யாருக்கு எவ்வளவு கலெக்சன்னு கணக்கெடுக்கிற வேலையையும் சேர்த்து பார்த்துகிட்டு வருகிறாராம். கலெக்சனில் தனக்கு வசூலில் பங்கு கொடுப்பவர்களுக்கு அவர்கள் விரும்புகிற முக்கியத்துவம் வாய்ந்த டூட்டியும், கொடுக்காதவர்களுக்கு கடுமையான பணிகளையும் ஒதுக்குகிறாராம். இதை பத்தி யாராவது கேள்வி கேட்டால் சொல்வதை மட்டும் கேள். இல்லைன்னா விளைவு கடுமையா இருக்கும்னு மிரட்டல் விடுக்கிறாராம். ரைட்டரின் தில்லாலங்கடி வேலைகளை எல்லாம் ஆதாரப்பூர்வமாக தொகுத்து அதே ஸ்டேசனில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் ஒருவர் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வந்தாராம். இந்த தகவல் தெரிந்த ரைட்டர் அந்த போலீஸ்காரரை தன்னோட செல்வாழ்க்கை பயன்படுத்தி டிரான்ஸ்பர் செய்துவிட்டாராம். இந்த வெற்றியை ரைட்டர் மற்றும் அவரது கூட்டாளிகள் சமீபத்தில் உற்சாக பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளனர். வசூலை தடுக்கவோ இனி நம்மை சீண்டி பார்க்கவோ யாரும் இல்லைன்னு உற்சாக வெள்ளத்தில் மிதந்தார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குயின்பேட்டை இலை ஒன்றிய செக்ரட்ரிகள் மேல ஏகப்பட்ட புகாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல லி என்று முடியுற 4 எழுத்து கொண்ட இலை பார்ட்டியோட ஈஸ்ட் ஒன்றியம் இருக்குது. இது ஈஸ்ட், வெஸ்ட்டுன்னு 2 ஒன்றியங்களாக இயங்கி வருது. இதுல ஈஸ்ட் ஒன்றிய செக்ரட்ரியாக 4 எழுத்து கொண்டவரும், வெஸ்ட் ஒன்றிய செக்ரட்ரியாக 5 எழுத்து கொண்டவரும் பொறுப்புல இருக்குறாங்க. இவங்க தலைமை என்ன சொல்லுதோ அதை செய்றதே இல்லையாம். இலை பார்ட்டி சார்புல வழங்குற நலத்திட்ட உதவிகளைக்கூட அவங்களுக்கு தேவையான ஆட்களுக்கு மட்டும் தான் கொடுக்குறாங்களாம். அட நலத்திட்டம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. மரியாதை கூட கொடுக்க மாட்டேங்குறாங்கன்னு தொண்டர்கள் புலம்புறாங்க. இந்த புலம்பல் இப்ப எதிர்ப்பாக மாறிவருதாம். ஒன்றிய செக்ரட்ரிகளை மாத்தியாகணும்னு தொண்டர்கள் கொடிபுடிக்குறாங்களாம். அப்போதான் பார்ட்டி வளரும் இல்லைன்னா, இலை பார்ட்டி பின்னோக்கி போகிடும்னு சொல்றாங்களாம். அதுமட்டுமில்லாம பலபேரு, வேற நல்ல பொலிடிக்கல் பார்ட்டிய, பார்த்து போயிடலாம்னு துடிக்குறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post மாணவர்களிடம் கையெழுத்து கிடைக்காமல் தவியாய் தவிக்கும் தாமரை பார்ட்டி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article