மாஜி மந்திரி, மலராத கட்சியின் சீக்ரெட் செல் போல செயல்படுகிறாரா என்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

1 week ago 3

‘‘பிரிந்து சென்ற நிர்வாகிகளை மீண்டும் தேனிக்காரர் பக்கம் இழுப்பதற்கான வேலையில் வைத்தியானவரின் வாரிசு களம் இறங்கியிருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தேனிக்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சர் வைத்தியானவர், தேனிக்காரர் அணியில் இருந்து பிரிந்து இலைக்கு சென்ற நிர்வாகிகளை மீண்டும் இழுப்பதற்கான அசைமென்ட்டை தனது வாரிசிடமே கொடுத்துள்ளாராம்… அதில், நெற்களஞ்சியம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தேனிக்காரர் அணியில் இருந்து இலை கட்சிக்கு தாவிய நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்து பேச வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அவர்களை நமது அணிக்கு மீண்டும் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளாராம்..
அதன்படி, வைத்தியானவரின் வாரிசுகாரர் நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து பேசுவதோடு மீண்டும் தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கான திரைமறைவான வேலைகளில் இறங்கி இருக்கிறாராம்.. இந்த தகவல் தெரிய வந்த சேலத்துக்காரர் டீம் அவரது கவனத்துக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொகுதிக்குள் மாஜி மீண்டும் என்ட்ரி ஆவது பிடிக்காத சிலர் மலராத கட்சியின் சீக்ரெட் செல் என தலைமைக்கு கொளுத்தி போட்டிருக்காங்களாமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தின் வணிக நகரான மெடல் சட்டமன்ற தொகுதியை, இலைக்கட்சியின் மூன்றெழுத்து தொழிலதிபர் மாஜிக்கு தருவதாக தலைமை ஏறக்குறைய உறுதி கொடுத்து விட்டதாம்.. ஏற்கனவே, தான் எம்எல்ஏவாக இருந்த மாவட்டம் என்றாலும், அதன்பின் பல்வேறு பாலிடிக்ஸ் காரணமாக அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தலைநகரில் உள்ள ‘டி’ என முடியும் மூன்றெழுத்து தொகுதியில் போட்டியிட வேண்டியதாகி விட்டது. தற்போது தொகுதி உறுதியாகி விட்ட நிலையில், வார இறுதி நாட்களில் மெடல் தொகுதியை மீண்டும் வலம் வர தொடங்கி விட்டாராம்.. இங்குள்ள கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறாராம்.. புத்தாண்டு பிறந்ததுமே தொகுதியில இருக்கிற ஒவ்வொரு தொண்டன் வீட்டுலயும் தனது படம் இருக்கிற மாதிரி காலண்டர் அடித்து கொடுத்திருக்கிறாராம்.. அடுத்ததாக பொங்கலுக்கு தொகுதி கிளைச் செயலாளர் துவங்கி நிர்வாகிகள் வரை ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, பொங்கல் பானை கொடுத்தும், வயதான தொண்டர்களை வீடுகளுக்கே போய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி குடும்ப உறுப்பினர்களின் ஓட்டுகளை இப்பவே கரெட் பண்ணிட்டு வருகிறாராம்.. இதனால் இவருக்கு பின்னால் இலைக்கட்சி தொண்டர்கள் படை திரட்டி வருகின்றனராம்.. மெடல் தொகுதி நமக்கு கிடைக்கும் என கனவில் மிதந்த மாஜி எம்எல்ஏ, மூத்த நிர்வாகிகள் எல்லாம் விழிபிதுங்கி இருக்காங்களாம்.. இவர் மீண்டும் மெடல் மாவட்டத்தில் என்ட்ரி ஆவதை பிடிக்காத சிலர், இவர் மலராத கட்சியின் சீக்ரெட் செல் என கொளுத்தி போட்டுள்ளனராம்.. இது பத்தி எரியுதா, இல்லை பஸ்பமாகுதான்னு விரைவில் தெரியும்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜெயில் சமூக ஆர்வலர் தாக்கப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்பது போல, ஜெயில் டிபார்ட்மென்டில் உள்ள அதிகாரிகளுக்கு எல்லா பக்கமும் இடியாகவே இருக்காம்.. பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் ஆபீசர்ஸ் ஒருபக்கம் என்றால், இருக்கிற பதவியை காப்பாத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதாம்.. இப்படித்தான் 8 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் ஜெயில் உயரதிகாரியாக இருந்த ஒருவர், ஜெயிலுக்கு வந்த சமூக ஆர்வலர் ஒருவரை தாக்கினாராம்.. நிலத்தை ஆர்ஜிதம் செஞ்ச பிறகு, மேம்பாலத்தை கட்டுங்கன்னு இலைக்கட்சி ஆட்சியின்போது எதிர்ப்பு தெரிவிச்சதால, அவர் ஜெயிக்கு போனாராம்.. அப்போதிருந்த போலீஸ் அதிகாரிகள், அவரை சிறைக்குள் தள்ளியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தாங்களாம்.. அப்போது தான், சமூக ஆர்வலர் கொடூரமாக தாக்கப்பட்டாராம்.. அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி, சமூக ஆர்வலர் கோர்ட் படி ஏறியிருக்காரு.. பல்வேறு கட்டங்களை தாண்டி வந்த வழக்கு, திடீரென தள்ளுபடியாகி போச்சாம்.. இதன் காரணமாகவே பதவி உயர்வு நின்றிருந்த நிலையில், பெரும் நிம்மதியாக இருந்தாராம் அந்த அதிகாரி.. ஆனால், அந்த நிம்மதி மீண்டும் கெட்டுப்போச்சாம்.. தாக்கப்பட்ட சமூக ஆர்வலர் வழக்கை, தன்னிச்சையாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்திருக்காம்.. இதனால அந்த அதிகாரி ரொம்பவே அப்செட் ஆகிப்போனாராம்.. விசாரணைக்கு ஆஜராகுமாறு சமூக ஆர்வலருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருக்காம்.. இங்கு தனக்கு நீதி கிடைக்குமுன்னு நம்புறாராம் அவர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சாத்தான்குளம் என்ற பெயரை கேட்டாலே காவல் துறை அதிகாரிகள் அலறுகின்றனராமே.. ஏன்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி ஆட்சியின் போது கொரோனா காலத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரு வியாபாரிகளை அழைத்து வந்து காவல் துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். மதுரை சிபிஐ கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்த போலீஸ் ஸ்டேஷன் பெயரை கேட்டாலே காவல் துறை அதிகாரிகள், கண்ட்ரோல் ரூம் டூட்டி கூட போடுங்க, சாத்தான்குளம் வேண்டாம், ஆளை விடுங்க….என தப்பி ஓடுகிறார்களாம். சமீபத்தில் இந்த போலீஸ் ஸ்டேஷனில் ராஜ அதிகாரியாக வலம் வந்தவர் மீது எல்லையோர மாவட்டத்தில் மோசடி வழக்கு பாய்ந்தது. ஊரை காக்க வேண்டிய காவல் அதிகாரி மீதே வழக்கு பாய்ந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் அடுத்து வந்த மற்றொரு ராஜ அதிகாரி ஓய்வு பெறுவதற்கு இன்றும் ஓராண்டு இருக்கும் நிலையில் டிஎஸ்பி பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அவரும் பணியில் இருக்கும் போதே நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இப்படி இரண்டு மரணங்களுக்கு காரணமான போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி மாறி வரும் போலீஸ் அதிகாரிகளுக்கும் கெட்ட சகுனம் இருப்பதாக கருதி, இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்கு காக்கி அதிகாரிகள் தயக்கம் காட்டுகிறார்களாம்..’’

The post மாஜி மந்திரி, மலராத கட்சியின் சீக்ரெட் செல் போல செயல்படுகிறாரா என்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article