ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து இறந்த தற்காலிக மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு தமிழக அரசின் ரூ.10 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
ஆர்.கே.பேட்டை அருகே பெரியராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (25). மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த மாதம் 24ம்தேதி பெரியராமாபுரம் பகுதியில் மின்மாற்றியில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு ரகுபதி பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் மின்சாரம் பாய்ந்து இறந்த தற்காலிக பணியாளர் ரகுபதி குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் காந்தி பரிந்துரை செய்தார். அதன்படி அமைச்சர் ெசந்தில்பாலாஜி உத்தரவிட்டதையடுத்து பெரியராமாபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட ரகுபதி குடும்பத்தினரை சந்தித்து தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.10 லட்சத்தை அமைச்சர் காந்தி வழங்கினார். இதுபோல் ராணிப்பேட்டை விசுவாஸ் பள்ளி தலைவர் கமலாகாந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கினார். திருவள்ளூர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சேகர், திருத்தணி செயற் பொறியாளர் பாஸ்கர், ஆர்.கே.பேட்டை உதவி செயற்பொறியாளர் செந்தில், திமுக நிர்வாகிகள் மணி, பழனி, ஸ்ரீ தர், கவுஷிக் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
The post மின்சாரம் பாய்ந்து இறந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி உதவி: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் appeared first on Dinakaran.