மாஜி தாமரை தலைவர் கட்சி தாவ திட்டமிட்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 months ago 12

‘‘சொந்த மாவட்டத்தில் களஆய்வுக் கூட்டத்தை அதகளமாக்கி பெயரை ரிப்பேராக்கி விடக்கூடாதுன்னு ரொம்பவே கவனமா இருந்தாராமே சேலத்துக்காரர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘சொந்த ஊரில் நடந்த இலைகட்சியின் களஆய்வு கூட்டத்தை சேலத்துக்காரரே தலைமையேற்று நடத்தினாராம்.. போகும் இடமெல்லாம் அதகளமாக்கும் பூட்டு மாவட்டத்துக்காரர், முட்டை மாவட்டத்து மாஜி ஆகியோர்தான், முதலில் கூட்டத்தை நடத்துவதாக இருந்ததாம்.. இந்த ஊருக்கான பார்வையாளர்கள் பட்டியலிலும் அவர்களின் பெயர்தான் இருக்காம்..

நம்ம ஊரிலும் பூட்டு மாவட்டத்துக்காரர் நடத்தும் ஆலோசனை அதகளமாகி விடக்கூடாது என்பதால் சேலத்துக்காரரே தலைமை ஏற்று நடத்தினாராம்.. இது குறித்து ஊடகங்களில் அரசல், புரசலாக தகவல் பரவியதாம்.. இந்த தகவலை பொய்யாக்கி விட வேண்டும். இதற்காகவே பூட்டு மாவட்டத்து மாஜியை பங்கேற்கச்செய்ய வேண்டும் என்று சீனியர் பார்ட்டிகள் சிலர், சேலத்துக்காரரிடம் கோரிக்கை வச்சாங்களாம்.. அப்படியே செஞ்சிடலாம் என்று அவரும் தலையாட்டினாராம்..

ஆனால் கூட்டம் தொடங்குவதற்கு முன்புதான், அதகள மாஜி நம்ம ஊருக்கு வரவில்லை என்பது உள்ளூர் நிர்வாகிகளுக்கு தெரிஞ்சதாம்.. தகவலை பொய்யாக்குவது முக்கியம்தான். ஆனால் சொந்த மாவட்டத்தில் நம்ம பேரு ரிப்பேர் ஆகிடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருந்தாராம் சேலத்துக்காரரு.. இதன் காரணமாகவே பூட்டு மாவட்ட மாஜி களஆய்வு கூட்டத்திற்கு வரவில்லை என்கின்றனர் விவரம் அறிந்த நிர்வாகிகள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேர்மன் பதவிக்காக காத்திருக்கும் மாஜி தாமரை கட்சி தலைவர், பதவி இல்லாவிட்டால் புது கட்சிக்கு தாவ யோசித்து வருகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி மாநிலத்தில் மாஜி தாமரை கட்சி தலைவர், பதவி பறிக்கப்பட்டதில் இருந்து கடும் விரக்தியில் இருந்து வருகிறாராம்.. தன்னால் தான் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி மலர்ந்தது என தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த அவரை, இப்போதைய தலைவர் கண்டுகொள்வதே இல்லையாம்.. கட்சி விழாவிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் ஓரம்கட்டப்பட்டு வந்தாராம்.. இதனால் புதிதாக தொடங்கிய நடிகர் கட்சிக்கு தாவும் முடிவுக்கு வந்துள்ளாராம்..

இருப்பினும் சில ஒன்றிய அதிகார மைய தரப்பில் இருந்து வந்த அறிவுரையை ஏற்று தற்போதைக்கு அந்த யோசனையை கொஞ்சம் தள்ளி வைத்துள்ளாராம்.. அரசில் சேர்மன் பதவி கிடைத்தால் அதே கட்சியில் தொடரலாம்னு முடிவு செய்திருக்கிறாராம்.. இருப்பினும் புல்லட்சாமி தரப்பில் சேர்மன் பதவி குறித்து இதுவரை எந்தவொரு பச்சைக்கொடியும் காட்டாத நிலையில், வரும் புத்தாண்டிலாவது அரசியல் ஆளுமையில் விடிவு பிறக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறதாம் மாஜி தரப்பு. இதுதான் தாமரை கட்சியில் ஒரு டாபிக்காக பேசப்பட்டு வருதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பணத்தை வாரி குவிச்சிட்டு லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கிய நகராட்சி உதவி கமிஷனர் பணியில் சேர முடியாம பொறியில் சிக்கிய எலிபோல முழிக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘அல்வா மாநகராட்சியில் உதவி கமிஷனருக்கு பணியிடம் ஒதுக்காமல் கமிஷனர் நிறுத்தி வைத்து விட்டாராம்.. மேலப்பாளையம், பாளையங்கோட்டை மண்டலங்களில் உதவி கமிஷனராக பணியாற்றிய அதிகாரி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாறுதலில் திருவேற்காடு நகராட்சிக்கு சென்று விட்டார்..

அங்கிருந்து ஊட்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். குளிரான பிரதேசத்தில் கமிஷனராக இருந்த அவர் பணத்தை வாங்கி குவித்துள்ளார்.. அவரை குறி வைத்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் சென்ற போது வழியில் மடக்கிட்டாங்களாம்.. காரில் இருந்த பணத்தை பார்த்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் திகைச்சிட்டாங்களாம்.. கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளுடன் காரில் இருந்த லஞ்ச பணம் மட்டும் ரூ.11.70 லட்சம் சிக்கியிருக்கு.. லஞ்ச குற்றச்சாட்டால் வெயிட்டிங்கில் வைக்கப்பட்ட அவர் மீண்டும் அல்வா மாநகராட்சிக்கு உதவி கமிஷனராக தூக்கி அடிக்கப்பட்டாராம்..

அவர் மீதான லஞ்ச குற்றச்சாட்டு நிலுவையில் இருக்கும் நிலையில் ஆணையை தூக்கிக் கொண்டு பணியில் சேர வந்துள்ளார் உதவி கமிஷனர்.. ஆனால் அல்வா மாவட்டத்திலும் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்ப அவரது ஆணையை நிறுத்தி வைத்துள்ளாராம் கமிஷனர்.. இதற்காக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் கிளியரன்ஸ் கோரியுள்ளாராம் அல்வா மாநகராட்சி கமிஷனர்.. இதனால் பணியில் சேர முடியாமல் பொறியில் சிக்கிய எலி போல மாட்டிக் கொண்டு முழிக்கிறாராம் உதவி கமிஷனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேலத்துக்காரரோடு மீண்டும் பால்வள மாஜி நெருக்கமானது எதிர் அரசியல் செய்து வந்த கட்சியினர், மாஜிக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மெடல் நகர் மாவட்ட அதிமுக செயலாளரான மாஜி பால்வள மந்திரி கடந்த சில மாதங்களாக சேலத்துக்காரருடன் மோதல் போக்கில் இருந்தார். கட்சி நிகழ்வுகளில் ரொம்ப ஆக்டிவாக இல்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காராச்சேவு நகர் மாஜி எம்எல்ஏ, பால்வளத்தால் பாதிக்கப்பட்ட மாஜி அமைச்சர்களான உதயமானவர் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து, மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார்.

பால்வளத்துக்கு எதிராக அரசியல் செய்ய சேலத்துக்காரர் கிரீன் சிக்னல் கொடுத்ததால், கிழக்கு மாவட்டத்தில் 130 புதிய நிர்வாகிகளை மாஜி எம்எல்ஏ நியமித்தார். பால்வளத்தின் தீவிர விசுவாசியான காராச்சேவு நகர செயலாளர் ஒருவர் நீக்கப்பட்டார். இதனால் மாவட்டத்தில் பால்வளத்தின் அரசியல் செல்வாக்கு இறங்கு முகமாக இருந்தது. ‘தலைவரே…

இதேபோன்று சென்றால் மாவட்டம் நம்ம கண்ட்ரோலில் இருக்காது’ என பால்வள ஆதரவாளர்கள் பொங்கவே, உடனடியாக தனது ஈகோவை மறந்து கடந்த சில நாட்களுக்கு முன் சேலத்துக்காரரை நேரில் சந்தித்தார் பால்வளம். கட்சி தொடர்பான நிகழ்வுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்தார். தொடர்ந்து அவரை தொடர்பு கொண்டவண்ணம் இருந்தார். மெடல்நகர் மேற்கு மாவட்டத்தில் ஏராளமான புதிய நிர்வாகிகளையும் நியமித்தார். சேலத்துக்காரருடன் மீண்டும் பால்வளம் நெருக்கம் கண்டு எதிர் அரசியல் செய்த கட்சியினர் மற்றும் மாஜிக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

 

The post மாஜி தாமரை தலைவர் கட்சி தாவ திட்டமிட்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article