மாசி மாத பிரமோற்சவம் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இன்று வெள்ளி தேரோட்டம்

2 hours ago 3

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் விழா கடந்த 3ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்க மான், சந்திரப்பிரபை, யானை, ஹம்ஸ வாகனம், நாகம், தங்கக் கிளி, குதிரை, வெள்ளிரதம், தங்க சிம்மம், சூரிய பிரபை, தங்க பல்லக்கு, முத்து சப்பரம், சரபம் உள்ளிட்ட வாகனங்களில், காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின், முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.

விழாவில், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவ விழாவின் 8ம் நாளான நேற்று காமாட்சியம்மன் பத்ர பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இன்று இரவு முக்கிய உற்சவமான வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவமும், நாளை மறுநாள்(14ம்தேதி) அதிகாலை காமாட்சியம்மன் விஸ்வரூப தரிசனத்துடன் பிரம்மோற்சவம் விழா நிறைவடைகிறது.

The post மாசி மாத பிரமோற்சவம் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இன்று வெள்ளி தேரோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article