கும்பகோணம், ஏப்.3: கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கும்பகோணம் பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும், ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை பெற்றார். சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டிற்குரிய விழா நேற்று பிரஹந்நாயகி உடனாகிய நாகேஸ்வரசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருள, நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற, தங்க கொடிமரத்திற்கு சந்தனம், பால் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 10ம் தேதி வியாழக்கிழமை தேரோட்டமும், 11ம் தேதி வெள்ளிக்கிழமை தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
The post மழையோடு விளையாடி… நாகேஸ்வரசுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் appeared first on Dinakaran.