கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதிக்கு ஆத்துப்பாக்கம், மாதர்பாக்கம், வலுதலம்பேடு, புதூர், ரெட்டம்பேடு, ஆரம்பாக்கம், மங்காவரம், பொன்னேரி, தேவம்பேடு, பட்டுப்புள்ளி, அப்பாவரம், மேலகழனி, நத்தம், தேர்வழி, அயநெல்லூர், பெத்திகுப்பம், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், ஓபசமுத்திரம் உள்ளிட்ட 150 கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்கள் தேவைக்கு கார், லாரி, இருசக்கர வாகனங்கள் மூலம் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்கள் காய்கறி, மளிகைக் கடை, துணிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு பொருட்கள் வாங்கி செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வழக்கம்.
இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சந்திப்பில் மழைநீர் வடிகால் கால்வாய் பணி கடந்த ஒரு மாத காலமாக மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் காரணமாக இருபுறமும் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று இரவு 7 மணியளவில் சுமார் ஒரு மணி நேரம் மேற்கண்ட சந்திப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசுப் பேருந்து, தனியார் பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. இதை அறிந்த பொதுமக்களே போக்குவரத்தை சரி செய்ய முற்பட்டனர்.
அப்போது ஆம்புலன்ஸ் சுமார் ஒரு மணி நேரம் உள்ளே சிக்கிக்கொண்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தது. அதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்த பின்னர் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் தினந்தோறும் இப்படி கடுமையாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. போதிய போலீசார் இல்லாததால் இப்படி அங்கு அடிக்கடி நிகழ்கிறது. இங்குள்ள மழை நீர் கால்வாயை உடனடியாக சீரமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், தொழிலாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்: போதிய போலீசாரை நியமிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.