பாட்னா: கடந்தாண்டு நடந்த நீட் வினாத்தாள் மோசடி வழக்கு தொடர்பாக எஸ்பிஐ வங்கி ‘லாக்கர்’ முதல் பாட்னா கும்பல் வரை நடந்த விபரங்களை சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்தாண்டு மே 5ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இத்தேர்வில் 13,16,268 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 67 பேர் முதலிடத்தைப் பிடித்தனர். ஆனால் இந்த தேர்வின் போது பீகாரில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. ரூ.30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை நீட் வினாத்தாள்கள் விற்கப்பட்டன. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை பீகார் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிந்து விசாரித்தது. அதன்பின் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் நீட் வினாத் தாள் கசிவு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், சிபிஐ பாட்னா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 63 பக்க குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்தாண்டு நடந்த நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தில், பீகார் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் லாக்கரில் இருந்து பாட்னாவை சேர்ந்த மோசடி கும்பல் வரை பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்தாண்டு மே 5ம் தேதி காலை 7.40 மணிக்கு, ஹசாரிபாக்கில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கி லாக்கரில் இருந்து நீட் வினாத் தாள்கள் அடங்கிய இரண்டு உலோகப் பெட்டிகளை அஹ்சானுல் ஹக் என்பவர் வாங்கிச் சென்றார். இந்தப் பெட்டிகளை அவர் இம்தியாஸ் ஆலம் என்பவரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் அவர் அவற்றை ஹசாரிபாக்கில் உள்ள ஓயாஸிஸ் பள்ளி என்ற தேர்வு மையத்திற்கு காலை 7.53 மணிக்கு கொண்டு சென்றார். இங்கு, பங்கஜ் குமார் என்பவருக்கு வினாத் தாள்களின் டிஜிட்டல் நகல்களை எடுக்க அனுமதித்தார். இந்த நகல்கள் உடனடியாக பாட்னாவில் இருக்கும் கும்பலுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் ஸ்கேன் செய்து அதனை பல லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்கஜ் குமார், அஹ்சானுல் ஹக், இம்தியாஸ் ஆலம், ஏழு எம்பிபிஎஸ் மாணவர்கள் முக்கிய குற்றவாளிகள் ஆவர். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 45 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கைதான குற்றவாளிகள் மீது ஐபிசி பிரிவுகள் 120-பி, 109, 409, 420, 380, 201, 411, ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13(2) மற்றும் 13(1)(ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத் தாள் கசிந்தது உறுதியானதால், அதனை 144 தேர்வர்கள் பார்த்து பயனடைந்தனர். இவர்களின் பெயர்கள் ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.
The post கடந்தாண்டு நடந்த நீட் வினாத்தாள் மோசடி வழக்கு; எஸ்பிஐ வங்கி ‘லாக்கர்’ முதல் பாட்னா கும்பல் வரை… சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பகீர் appeared first on Dinakaran.